நாமக்கல் மாவட்டத்தில் 46 இடங்களில் வனப்பறவைகள் கணக்கெடுப்பு பணி
நாமக்கல் மாவட்டத்தில் 46 இடங்களில் ஈர நிலைப்பறவைகள் மற்றும் வனப்பறவைகள் குறித்த ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.;
பைல் படம்
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் 46 இடங்களில் ஈர நிலப்பறவைகள் மற்றும் வனப்பறவைகள் குறித்த ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
2025 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு வருகின்ற 9ம்தேதி ஈர நிலங்களிலும், 16ம் தேதி வனப்பகுதிகளிலும் நடைபெற உள்ளது, கல்லூரி மாணவ, மாணவிகளின் தனித் திறனை வெளிக்கொணரும் வகையில் வன உயிரினங்களின் வாழ்விடம், இடப்பெயர்வு (மைக்ரேஷன்), பறவைகளின் நிலை பற்றிய விவரத்தை அறிந்து கொள்வது அவசியமாகும். எனவே, நாமக்கல் வனக்கோட்டத்தை சார்ந்த 20 ஈரநிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. நாமக்கல் வனச்சரகத்தில் உள்ள பழையபாளையம், சரப்பள்ளி, நாச்சிப்புதூர், இடும்பன் குளம், கஸ்தூரிப்பட்டி ஆகிய ஏரிகளில் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறும். ராசிபுரம் இடைபடு காடுகள் பகுதியில் உள்ள ஏ.கே.சமுத்திரம், கண்ணூர்பட்டி, புதுச்சத்திரம், தும்பல்பட்டி ஆகிய ஏரிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும். மேலும், ஜேடர்பாளையம், பருத்திப்பள்ளி, உமயம்பட்டி, இலுப்பிலி, கேனேரிப்பட்டி, ஓசக்காரனூர், குருக்கபுரம், புத்தூர் ஆகிய ஏரிகளிலும், கொல்லிமலை வனச்சரகத்தில் உள்ள வாசலூர்ப்பட்டி ஏரி உள்ளிட்ட 20 இடங்களில் ஈரநிலப்பறவை கணக்கெடுப்பு பணி நடைபெறும்.
நாமக்கல் வனச்சரகத்தில் உள்ள சேந்தமங்கலம், ஜம்பூத், எருமப்பட்டி, தலமலை வடக்கு, நெட்ட வேலம்பட்டி, புளியஞ்சோலை ஆகிய கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வனப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். மேலும் ராசிபுரம், கொல்லிமலை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 26 இடங்களில் வனப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும்.
பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஆர்வமுள்ள தன்னார்வாலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் இந்த கணக்கெடுப்பில் கலந்துகொள்ளலாம். மேலும், பறவைகளின் அசைவு பற்றிய புகைப்படம் எடுக்க ஆர்வமுள்ள புகைப்பட வல்லுனர்கள், அனுபவம் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் பறவை நிபுணர்கள் அனைவரும் பணியில் கலந்துகொள்ளுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.