பரஞ்சோதி குருமகான் குமாரபாளையம் வருகை

உலக சமாதான ஆலய நிறுவனர் பரஞ்சோதி குருமகான் குமாரபாளையம் வருகை தந்தார்

Update: 2022-12-05 17:15 GMT

குமாரபாளையம் வருகை தந்த  திருமூர்த்திமலை உலக சமாதான ஆலய நிறுவனர் பரஞ்சோதி குருமகான் 

உலக சமாதான ஆலய நிறுவனர் பரஞ்சோதி குருமகான் குமாரபாளையம் வருகை தந்தார்.

திருமூர்த்திமலை, உலக சமாதான ஆலய நிறுவனர் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பரஞ்சோதி குருமகான் ஆண்டுதோறும் உலகெங்கும் உள்ள அனைத்து கிளைகளுக்கும் சென்று, அங்குள்ள மக்களுக்கு அருளாசி வழங்கி வருவது வழக்கம். நேற்று குமாரபாளையம் உலக சமாதான ஆலய கிளைக்கு வந்து அருளாசி வழங்கினார்.

குருமகான் பரஞ்ஜோதியார் :தனது அருளுரையில், மார்கழி மாதம் மிக புண்ணிய மாதம். இறைவனை மாதம் முழுதும் வேண்டி, பிரார்த்தித்து வணங்கினால் சகல சுபிட்சம் உண்டாகும். பஜனை குழுவினர் திருவீதி வலம் வந்து இறைவனை பாடுவதும் இந்த மாதத்தில்தான். 

அவரவர் இடத்திலிருந்தே, தவ அனுபவத்தை, மாமனித நிலையை, இறைநிலையை, பரஞ்ஜோதி நிலையை, உயர்ந்த நிலையை அடைதல் வேண்டும். குரு என்பவர் தமது சீடர்களும், உன்னத நிலையை அடைய வேண்டும் என்றே விரும்புவார். பரம்பொருளை தன்னுள்ளும், எல்லோருக்குள்ளும் காண்பவர்கள்தான் எளிமையான வாழ்வை சிறப்பாக வாழ்கின்றனர். அனைத்து சமயங்களும், தன்னுள் இருக்கும் சக்தியை பிரபஞ்ச சக்தியாகவே கருதுகின்றன.

ஆன்மாவிலிருந்தே இந்த பிரபஞ்சம் தோன்றியது. விஞ்ஞானிகள் புற நோக்கிலிருந்தும், மெய்ஞானிகள் அக நோக்கிலிருந் தும், உலகை காண்கிறார்கள். உலகை ஆட்டிப்படைக்கும் தொற்று பரவல் விரைவில், நீங்கி நலம் பெறட்டும்; நாம் விடுகின்ற மூச்சு நல்லதாக இருக்கட்டும். சந்தோஷ மூச்சாக இருக்கட்டும். அப்போது, நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும், சந்தோஷமே விளையும். சந்தோஷ நல்லெண்ண அலைகள் பரவி, கவலைகள் மறையட்டும். தவ யோகியர்களால், ஓருலக இறையாட்சி அமையும்; புதியதோர் உலகம் அமையும்  எனக்குறிப்பிட்டார்.

குமாரபாளையம் உலக சமாதான ஆலய கிளை நிர்வாகிகள் கூறியதாவது: ஆண்டு தோறும் உலக நன்மை வேண்டி டிசம்பர் மாதம் தொடங்கி, ஜனவரி மாதம் வரும் வகையில் 21 நாட்கள், அன்ன ஆகாரம், குடிநீர் எதுவும் இல்லாமல் தனி அறையில் இருப்பது வழக்கம். வெளியே பூட்டி விடுவார்கள். 21 நாட்கள் கழித்து தான் அறையை திறந்து விடுவார்கள். இதனை வேள்வி என்பார்கள். இதுவரை 32 ஆண்டுகள் இதுபோல் இருந்துள்ளார். தற்போது 33வது ஆண்டாக டிச. 18ல் தொடங்க உள்ளார். 21 நாட்கள் கழித்து வெளியே வருவார். முதல் வேள்வி பவானியில் தொடங்கினார். குமாரபாளையம் காவிரி ஆற்றின் நடுவில் உள்ள பாறை மீதுள்ள சிறிய அறையில் இரண்டாவது வேள்வியை நடத்தினார். உடுமலை திருமூர்த்திமலை உலக சமாதான ஆலயத்தில், 32வது பிரபஞ்ச நல மகாதவ வேள்வி நிறைவு விழா நடந்தது என்றனர்.

நிகழ்வில்,  குமாரபாளையம் கிளை செயலர் ஆனந்தன், துணை செயலர் நாகராஜ், பொருளாளர் சண்முகம், ஞான ஆசிரியர்கள் சாந்தி, கேசவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Tags:    

Similar News