பாரம்பரியம் காக்கும் பொன் மற்றும் வெள்ளி நகைகள்..!

பாரம்பரியம் காக்கும் பொன் மற்றும் வெள்ளி நகைகள் -சிறப்புக் கட்டுரை;

Update: 2023-10-19 03:27 GMT

குமாரபாளையம் நகைக்கடையில், பொற்கொல்லர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை செய்து வருகிறார்கள்.

பாரம்பரியம் காக்கும் பொன் மற்றும் வெள்ளி நகைகள் என்பது பற்றி நகை வியாபாரி தனசேகரன் நம்முடன் சில நகைகள் குறித்து சில அடிப்படை விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது :-

பெண்களுக்கு மிகவும் பிடித்தமானவைகளில் பொன் நகைகள் முதலிடம் பிடித்துள்ளது.அனைத்து இந்து கடவுளர்கள் பொன்னாலான ஆபரணங்களை  அணிந்து இருக்கும் காட்சிகளே நமது நகை அணியும் பழக்கம்  பாரம்பரியம் மிக்கது என்பதை நாம் அறியலாம். 

தோடுடைய செவியன் என்று சிவபெருமான், புலவர்களால் பாடப்பட்டுள்ளதை அனைவரும் அறிவார்கள். ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, மணிமேகலை ஆகிய காவியங்களும் ஆபரணங்கள் குறித்த கருவின் அடிப்படையிலானது.

பொன் தாலி வருவதற்கு முன்பு பனை ஓலையை சுருட்டி, தால் எனப்பெயரிட்டு அதனைத்தான் மஞ்சள் நூலில் கட்டி தாலியாக கட்டி வந்தனர். காதணிகள் வருவதற்கு முன்பு மலர்களை தங்கள் காதுகளில் சூடிக்கொள்வது வழக்கமாக இருந்தது. காலப்போக்கில் பல உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உலோகங்களில் உயர்வானது பொன்.

அதனால் பொன்னில் தாலி செய்து மாங்கல்யம் என பெயரிட்டு, திருமணங்கள் நடைபெற்றன. இந்த பொன் தாலி செய்வது என்ற நிகழ்வை, திருமண வீட்டார் இரு தரப்பினரும் நல்ல நாள் பார்த்து, பொற்கொல்லரிடம் கொடுத்து பொன் தாலி செய்யக்கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மாங்கல்யம் கட்டிய பின் மணமக்கள் இருவரையும் திருமணத்திற்கு வரும் சான்றோர் பெருமக்கள் அனைவரும் ஆசீர்வதிப்பது பாரம்பரியங்களில் முக்கியமானது. பொன் தாலிக்கு அந்த அளவிற்கு மரியாதை தரப்படுகிறது. மகாலட்சுமியின் அம்சமாகவே பொன் நகை பார்க்கபடுகிறது.

ஒரு நாட்டின் பொருளாதாரமே தங்கத்தின் இருப்பை  வைத்துத் தான் கணக்கிடப்படுவதாக கூறுவார்கள். கரன்சி நோட்டுக்களும் தங்கத்தின் இருப்பு வைத்தே அச்சிடப்படுகிறது. இந்திய பெண்களுக்கு தங்க நகைகள் மேல் விருப்பம் அதிகம். உலக அளவில் தங்க ஆபரண விற்பனையில் இந்தியா கணிசமான இடம் பெற்றுள்ளது.

தங்க நகைகள் மட்டுமில்லாமல் பொருளாதார பாதுகாப்பாகவும் உள்ளது. தங்கம் வாங்குவது ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. பொன் நகைகளை வழி, வழியாக சீதனமாக தரும் வழக்கத்தை இந்தியர்கள் கடைபிடித்து வருகிறார்கள். தாய், மகள், பேத்தி என இந்த பொன் நகைகள் குடும்ப நகைகளாக மாறி, சீதன பொருளாக மாறி புனிதப்பொருளாக கருதப்படுகிறது. நாகரீக மாற்றத்தால் நகைக்கடைகள் கார்ப்பரேட் நிறுவனங்களாக  மாறியிருந்தாலும், தாலி மற்றும் தாலிக்கொடி செய்யும் போது, தங்கம் கொடுத்து பொற்கொல்லர்கள் மூலம்தான் செய்து வருகிறார்கள்.

தென் ஆப்ரிக்க்காவில் உள்ள இம்பர்லி என்ற இடத்தில் வைரச்சுரங்கம் உள்ளது. இங்கு தங்கத்தாதுவும் உள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் கோலார் என்ற இடத்திலும், ஆந்திராவில் ஹட்டி என்ற இடத்திலும் தங்கச்  சுரங்கம் உள்ளது. காவிரி ஆற்றில் பொன் அணுக்கள் உள்ளதால் பொன்னி ஆறு என்றும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் தாமிரத்தாது உள்ளதால் தாமிரபரணி என்றும் அழைக்கப்படுகிறது.

பொன் நகை செய்யும் பொற்கொல்லர்கள் எனப்படும் கைவினை கலைஞர்கள் முன்பு போல் தற்போது அதிகம் இல்லாத நிலை உள்ளது. நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்வு, கையாள்வதில் சிரமம், பொதுமக்கள் ரெடிமேடு நகைகள் வாங்குதல், உள்ளிட்ட பல காரணங்களால் நேரடியாக பொற்கொல்லரிடம் கொடுத்து நகைகள் செய்வோர்  குறைந்து வருகிறார்கள். இவர்கள் வாரிசுகளும் தற்போது அந்த தொழிலை செய்யாமல் படித்து பட்டம் பெற்று வேறு பதவிகளுக்குச் செல்லவே விரும்புகின்றனர்.அதனால் வழி வழியாக செய்து வந்த பொற்கொல்லர் தொழிலை செய்வதற்கு ஆளில்லை. 

உணமையில் அது ஒரு கலை. நகை வடிவமைப்பு என்பது வெறும் படிப்பால் வந்துவிடாது. அதை அனுபவத்தின் மூலம் பெறுவது நுணுக்கங்களை நுட்பமாக கற்றுக்கொள்ள உதவும்.  

இப்படிப்பட்ட நிலையில் அரசு சார்பில் ஜெம்மாலாஜி, கோல்டு டிசைனிங் உள்ளிட்ட படிப்புகள் கொண்டுவரப்பட்டு, இந்த துறையில் மாணவர்கள் வரவேண்டும் என முயற்சிகள் செய்து வருகின்றன. மத்திய அரசு நிதி உதவியும் வழங்கி தங்க நகை மதிப்பிடுதல் உள்ளிட்ட பல வேலைவாய்ப்புகளை வங்கிகள், நகை தொழிற்சாலைகள் ஆகியவற்றில் ஏற்படுத்தி தருகிறது. கோவை, சென்னை, ஓசூர், மும்பை, கல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், ஆகிய இடங்களில் நகை உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன.

நகை ஆய்வு செய்ய உரைகல் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது ஸ்கேனிங் மூலம் நகையின் தரம் மதிப்பிடப்படுகிறது. தங்கம் விற்பனையை ஹால்மார்க் முத்திரையுடன்தான் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசின் தரக்கட்டுப்பாடு நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது. 916 பிஸ்மார்க் முத்திரையிடும் உரிமையை அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

என்றும் மதிப்பு மிக்க தங்கத்தில் முதலீடு செய்வதே வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது. இதே போல் வெள்ளியும் மிக முக்கியமானது. திருமணத்தின்போது பட்டம் கட்டுதல், மணப்பெண்ணுக்கு கால் கொலுசு, பிறக்கும் குழந்தைக்கு அரைஞான், கைகளில் காப்பு, திருமணம் முடிந்தும் மணப்பெண்ணுக்கு அணிவிக்கப்படும் மெட்டி என பல முக்கிய சடங்குகளில் வெள்ளி பிரதான இடம் பெற்று வருகிறது, என்றார்.

Similar News