பாஜக வக்ஃப் சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற திட்டம் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கண்டனம்
பாஜக வக்ஃப் சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற விரும்புகிறதா? முஸ்லீம் லீக் அதிரடியாக எதிர்ப்பு;
பாஜக வக்ஃப் சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற திட்டம் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கண்டனம்இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் வக்ஃப் சொத்துகள் தொடர்பான முக்கிய விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக நடைபெற்ற முஸ்லிம் கூட்டமைப்பின் கூட்டத்தில் அவர் இக்கருத்துக்களை தெரிவித்தார்.
வக்ஃப் வாரிய மசோதா திருத்தங்களுக்கான நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் 26 உறுப்பினர்களில் 16 பேர் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் என்பதால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து விலகியதாக அவர் விளக்கினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த திருத்தங்கள் புறக்கணிக்கப்பட்டு, பா.ஜ.க. கூட்டணியினரின் 44 திருத்தங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பிருந்தே நிலவி வரும் வக்ஃப் வாரிய சட்டத்தின் கீழ், தமிழகத்தில் முஸ்லிம்கள், மன்னர்கள் மற்றும் இந்து சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் வழங்கிய சொத்துக்கள் உள்ளன. இந்தியாவில் ரயில்வே மற்றும் ராணுவ சொத்துக்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் உள்ள வக்ஃப் சொத்துக்களை அரசு சொத்துக்களாக மாற்றும் நோக்கத்துடனே இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக காதர் மொய்தீன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், தேவையெனில் நீதிமன்றத்தை நாடவும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஈரோடு தொகுதியில் 40,000-க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளதாகவும், பெரியார் காலம் முதலே இங்குள்ள முஸ்லிம்கள் சமூக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.