குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம்

குமாரபாளையத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம் அதிகாரிகள் வேண்டுகோளை ஏற்று கைவிடப்பட்டது.

Update: 2022-06-22 11:00 GMT

குமாரபாளையத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம்  பழச்சாறு கொடுத்து  முடித்து வைக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலர் பழனிவேல் தலைமையில் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் தரை தளம் அறை எண்: 6,7,8ல் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இது குறித்து தகவலறிந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. சீனிவாசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தட்சிணாமூர்த்தி, தாசில்தார் தமிழரசி, இன்ஸ்பெக்டர் ரவி. எஸ்.ஐ. மலர்விழி, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. முருகன் உள்ளிட்ட பலர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மாவட்ட தலைவர் பழனிவேலிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இது குறித்து அலுவலர் தட்சிணாமூர்த்தி உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் கூறும்போது ஜூன் 23 காலை 10:00 மணி முதல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அறை எண்: 7ல் செயல்படும். தற்போது உள்ள அலுவலகம் முன்பு, அறை எண்: 7ல் அலுவலகம் செயல்படும் என போர்டு வைக்கப்படும். இது உறுதி என்றார்.

பழனிவேல் கூறுகையில், ஒவ்வொரு போராட்டத்தின் போதும் இதையேதான் இவர் சொல்கிறார். நாங்கள் போராட்டம் கைவிடுவதாக இல்லை, என்று கூற, டி.எஸ்.பி. சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ரவி, தாசில்தார் தமிழரசி ஆகியோர், நாங்களும் இதற்கு உறுதி தருகிறோம், போராட்டத்தினை கைவிடுங்கள், என்றனர்.

இதன் பின் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். அலுவலர் தட்சிணாமூர்த்தி, டி.எஸ்.பி. சீனிவாசன் ஆகியோர் குளிர்பானம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவாக தே.மு.தி.க. மாவட்ட துணை செயலர் மகாலிங்கம், நகர செயலர் நாராயணசாமி பங்கேற்றனர்.

Tags:    

Similar News