காவிரி குடிநீர் விநியோகம் செய்ய, பொதுமக்கள் கோரிக்கை

குமாரபாளையம் அருகே கூடுதல் வாட்டர் டேங்க் அமைக்கவும், காவிரி குடிநீர் விடவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-05 10:00 GMT

காவிரி குடிநீர் விநியோகம் செய்ய, குமாரபாளையம் பொதுமக்கள் கோரிக்கை (கோப்பு படம்)

குமாரபாளையம் அருகே கூடுதல் வாட்டர் டேங்க் அமைக்கவும், காவிரி குடிநீர் விடவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த அளவிலான குடியிருப்புகள் இருந்தன. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அதிகரித்துள்ளது. இவைகளில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். குறைந்த குடியிருப்புகள் இருந்த போது சுமார் ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க் அமைக்கப்பட்டது. தற்போது அதிக அளவிலான வீடுகள், அதிக மக்கள் தொகை உள்ளதால், தற்போதுள்ள வாட்டர் டேங்க் போதுமானதாக இல்லாத நிலை உள்ளது.

மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் இரண்டு வருட காலமாக தண்ணீர் திறந்து விடாத நிலையில், நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. போர்வெல் நீர் குறைவாக இருப்பதால் இரண்டு ஆண்டு காலமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் தண்ணீர் எடுத்து விடப்படுகிறது. வாட்டர் டேங்கில் குறைந்த அளவு தண்ணீர் இருப்பதால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் தண்ணீர் கூட சுமார் 30 நிமிடம் அல்லது 40 நிமிடத்தில் நின்று விடுகிறது. இது அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகரித்துள்ள நிலையை கருத்தில் கொண்டு, மேலும் அதிக கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைத்து, தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஊராட்சி, மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏனஸ் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அ.தி.மு.க. ஆட்சியில், இடைப்பாடி சாலையில் உள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியில் நீரேற்று நிலையம் அமைத்து, தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம், பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகள், படைவீடு, திருச்செங்கோடு, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி குடிநீர் கிடைத்திடும் வகையில் கூட்டுகுடிநீர் திட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்திரவின் பேரில், முன்னாள் அமைச்சர் தங்கமணி கோரிக்கையினால் உருவாக்கப்பட்டு, குடிநீர் எடுக்கப்பட்டு சில நாட்கள் சோதனைக்காக காவிரி குடிநீர் விடப்பட்டது.

இந்த நீர் வந்ததால், பல வருட கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் மக்கள் இருந்தனர். ஆனால் தற்போது சுமார் 20 நாட்களுக்கும் மேலாக இந்த காவிரி குடிநீரும் விடப்படுவது இல்லை. காரணம் கேட்டால், புறவழிச்சாலை பகுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதனை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் தான் வந்து சரி செய்து தர வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தினர் கூறி வருகிறார்கள். முன்னாள் முதல்வர் ஒப்புதல் பெற்று, அமைச்சர் வேண்டுகோள் படி பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குழாய் உடைப்பு என காரணம் காட்டி, குடிநீர் விநியோகம் இல்லாத நிலையில் உள்ளதால், எந்த நோக்கத்திற்காக அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாத நிலையில் உள்ளது. இதனை கண்டுகொள்ளவும் ஆள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது நிறுத்தப்பட்டதா? எனவும் பொதுமக்களால் எண்ண தோன்றுகிறது. குடிநீர் விஷயத்தில் எவ்வித காழ்ப்புணர்ச்சியும் பாராது, தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி ஆற்றிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள தட்டான்குட்டை ஊராட்சி பகுதியில் இதுவரை காவிரி குடிநீர் கிடைக்கப்பெறாமல் இருப்பது இப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News