75 சதவீத கூலி உயர்வு வழங்க விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

குமாரபாளையத்தில் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Update: 2023-02-01 14:15 GMT

குமாரபாளையத்தில் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள்வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குமாரபாளையத்தில் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஏ.ஐ.சி.சி.டி.யூ.விசைத்தறி தொழிற்சங்க மாவட்ட பொது செயலர் சுப்பரமணி கூறியதாவது:

 


குமாரபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. மாவட்ட கலெக்டர் முன்னிலையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் கூட்டு விசைத்தறி தொழிலாளர சங்கத்தினர் என முத்தரப்பு பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டது.

ஆனால் ஏழு ஆண்டுகள் கடந்து இதுவரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு அடிப்படையில் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கியுள்ளது. தொழிலாளர்கள் பாதிக்கப்படும் முன்பே வட்டாச்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்து தீர்வு காண வேண்டும். இது தீர்வு காணப்படும் வரை குழுக்கடன் வசூலிக்க அவகாசம் வழங்கி உதவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.



இதில் விசைத்தறி சங்கங்களான எல்.பி.எப், ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.சி.சி.டி.யூ, எல்.டி.யூ.சி. உள்ளிட்ட விசைத்தறி கூட்டுத்தொழில் சங்கத்தின் சார்பில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஊர்வலமாக வந்த தொழிற்சங்கத்தினர் வட்டாச்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில் 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்டிருந்தனர். இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்படவில்லை. இதனால் தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் சண்முகவேல் சில நாட்கள் முன்பு ஏற்பாடு செய்திருந்தார். இதில் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்க முடியாத காரணம் குறித்து கடிதம் மூலம் தாசில்தாருக்கு தெரியப்படுத்தினர்.

கொங்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் போனஸ் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இது குறித்து சங்கமேஸ்வரன் கூறியதாவது:நூல்விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் தொழில் நடத்துவதே பெரும் சிரமமாக உள்ளது. தொழிற்சங்கத்தினர் 20 சதவீதம் போனஸ் கேட்டனர். இது குறித்து செயற்குழு கூட்டி முடிவெடுத்து சொல்கிறோம் என்று கூறி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தொழிசங்க நிர்வாகி சுப்பிரமணி கூறியதாவது:ஜவுளி உற்பத்தியாளர்கள் செயற்குழு கூட்டம் கூட்டி முடிவு சொல்வதாக கூறினார்கள். இது எங்களுக்கு உடன்பாடில்லை. தாசில்தாரை சந்தித்து இது பற்றி பேசினோம். இரண்டாம் கட்டமாக முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் ஏற்பாடு செய்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News