குமாரபாளையம்; முதல் பெண் ஆசிரியை பிறந்த நாள் கொண்டாட்டம்
குமாரபாளையத்தில் முதல் பெண் ஆசிரியை பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையத்தில் முதல் பெண் ஆசிரியை பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் கலைமகள் வீதியில் நடைபெறும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பாய் பூலே பிறந்தநாள் விழா விடியல் ஆரம்பம் சார்பில், அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடபட்டது.ஆசிரியை திருவுருவப்படத்திற்கு தலைமையாசிரியர் சுகந்தி மலர்மாலை அணிவித்தார்.
பள்ளி மாணவ மாணவிகள் பேச்சுப்போட்டி, மற்றும் வினாடி வினா வைக்கப்பட்டு, போட்டியில் வென்ற மாணவர்களுக்குபரிசாக பபுத்தகங்கள் வழங்கப்பட்டது. புத்தகங்களை எலந்தகுட்டை மருத்துவ அலுவலர் சையத் முகமத் ஆதில்ஷா வழங்கி வாழ்த்தி பேசினார்.
இதில் ஆசிரியை ஹெலன், ஹெலன், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர் ராணி, நிர்வாகிகள் தீனா, அங்கப்பன், உள்பட பலர் பங்கேற்றனர்.
சாவித்திரிபாய் புலே ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார். இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.
சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது.
இவர் 1831 இல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அக்கால வழக்கப்படி இவர் தன் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை (13 அகவை) 1840இல் மணந்தார். ஜோதிராவ் புலே தனது துணைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. ஒரு பிராமண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர்.
ஜோதிராவ் புலே 1846 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், தலித் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப் பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.
விதவைப் பெண்களின் தலையை மொட்டையடிப்பதைக் கண்டித்து நாவிதர்களைத் திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார். 1870ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதைகளான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார்.