குமாரபாளையம் அருகே கால்நடை அம்மை நோய் தடுப்பூசி முகாம்

குமாரபாளையம் அருகே கால்நடைகளுக்கு பரவும் அம்மை நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2022-11-24 00:42 GMT

குமாரபாளையம் பகுதியில் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட மாடுகள்.

கால்நடை வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த வருமானத்தில் அவைகளை மேய்த்து வளர்த்து வரும் நிலையில், பல நோய்களுக்கு ஆட்பட்டு கால்நடைகள் பாதிக்கப்படும் போது, விவசாயிகளும் நஷ்டமடைய நேரிடுகிறது. தற்போது வீ மேட்டூர், மேட்டுக்கடை, உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகளுக்கு அம்மை நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது.

இது மோளக்கவுண்டம்பாளையம் பகுதியில் கவுதம், என்பவரது மாடுகள் இந்த அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இது போல் அந்த பகுதியில் இருந்து பல பகுதியில் இந்த நோய் பரவி வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இவர்களின் அச்சத்தை போக்க, தடுப்பூசி முகாம் அமைத்து நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்ததின் படி நேற்று கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கால்நடைகள் அம்மை நோய் குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:

அம்மை நோய் என்பது வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் மூலமாக தொற்றக்கூடிய நோயாகும். இது ஒரு டி.என்.ஏ வைரஸ் ஆகும். இது ஹெர்பஸ் வைரஸ் என்ற குழுவைச் சேர்ந்தது. இது முக்கியமாக குழந்தைகளை பாதிக்க கூடியது. பெரியவர்களும் கால்நடைகளும் கூட இதனால் பாதிப்படையக் கூடும். இந்த வைரஸ் உடலில் ஆங்காங்கே சிவப்பு நிற கொப்புளங்களை தோற்றுவித்து நமைச்சல், எரிச்சலை உண்டாக்கும். இந்த கொப்புளங்களில் நீர் தேங்கி பார்ப்பதற்கு கண்ணாடியை போல் காட்சியளிக்கும். அம்மை போட்ட கொஞ்ச நாட்களில் இந்த கொப்புளங்களில் இருந்து நீர் கசியத் தொடங்கி விடும். கொப்புளங்கள் முழுவதுமாக ஆறின பிறகு அந்த இடங்களில் வடுக்களை உண்டாக்கி செல்கிறது.

கால்நடைகளில் அம்மைநோய்

இந்த அம்மை நோய் மனிதர்களை மட்டுமல்ல கால்நடைகளில் மாடு, பன்றி, ஆடு, குதிரை, ஒட்டகம், குரங்கு போன்ற பாலூட்டிகளையும் தாக்கக் கூடியது. இந்த வைரஸ் கால்நடைகளை தாக்கி அம்மை நோயை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட கால்நடைகளின் தோல் மூலமாகவோ அல்லது சுவாசிக்கும் காற்றின் மூலமாகவோ மற்றவர்களுக்கு பரவுகிறது.

ஆட்டம்மை

ஆடுகளில் இந்த வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் ஒரு தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட செம்மறியாடுகளின் தோல் பகுதியிலும், அவற்றின் கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளின் உட்சவ்வுகளிலும் அம்மைக் கொப்புளங்கள் தோன்றும். குறிப்பாக இந்த அம்மை நோய் வெள்ளாட்டு இனங்களை அதிகளவில் பாதிக்கிறது. ஒரு ஆட்டிடம் இருந்து மற்ற ஆட்டிற்கும், செம்மறியாட்டிற்கும் கூட இந்த நோய் பரவ வாய்ப்புள்ளது.

பரவும் விதம்

ஆட்டின் தோலில் ஏற்பட்ட கொப்புளங்களில் இருந்து வடியும் திரவம், எச்சில்கள், ஆட்டின் கழிவிலிருந்து நோய் பரவக் கூடும். தூய்மையற்ற படுக்கைகள், பாதிக்கப்பட்ட மனிதர்கள், தண்ணீர், தீவனம் மூலமாகக் கூட இந்த நோய் பரவுகிறது.

நோயினால் பாதிக்கப்பட்ட ஆட்டை மற்றொரு ஆடு தேய்க்கும் போது சருமத்தின் வழியாக இந்த நோய் பரவுகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட தாய் ஆட்டிடம் இருந்து வயிற்றில் உள்ள குட்டிகளுக்கு நஞ்சுக் கொடி மூலம் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.

அறிகுறிகள்

இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஆட்டிற்கு முதலில் காய்ச்சல் உண்டாகும். ஒரு வாரம் கழித்து தோலில் கொப்புளங்கள் தோன்ற ஆரம்பிக்கிறது.

ஆடுகளின் கன்னங்கள், மூக்குப் பகுதி, மடிப்பகுதி, கழுத்து பகுதி இடங்களில் நீர் வடிவுடன் கூடிய கொப்புளங்கள் தோன்றும். ஆணுறுப்பு பகுதி, பிறப்புறுப்பு, கண்கள், மூக்கு அவற்றின் உட்சவ்வுகள் அழுகி விடும். பாதிப்பு தீவிரமாக இருக்கும் போது இறப்பு கூட நேரிடலாம்.

நோய் தடுப்பு முறைகள்

பாதிக்கப்பட்ட ஆட்டை கொஞ்ச நாளைக்கு பண்ணையிலிருந்து தனியாக பிரித்து வைக்கலாம். தடுப்பூசி முறையாக அளித்து வரலாம். ஆடுகள் வசிக்கும் இடங்களை சுத்தமாக பராமரித்து வர வேண்டும்.

மாட்டம்மை

இந்த அம்மை வைரஸ் மாடுகளையும் தாக்கக் கூடியது. அம்மை வைரஸால் பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்தோ அல்லது மாடுகளிடமிருந்தோ மற்றவருக்கு எளிதாக தொற்றக் கூடியது. அறிகுறிகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட பசுவிற்கு கடுமையான காய்ச்சல் உண்டாகும். பால் சுரக்கும் மடிப்பகுதி, காம்புப் பகுதியில் சிவப்பு நிறத்தில் கொப்புளங்கள் தோன்றி அதில் நீர் தேங்கி இருக்கும். அதில் வடியும் நீரால் இந்த வைரஸ் மற்ற கால்நடைகளுக்கும் எளிதாக பரவும்.

தடுப்பு நடவடிக்கைகள்

மாட்டிற்கு முன்னதாகவே அம்மை தடுப்பூசி போட்டு வரலாம். பாதிக்கப்பட்ட மாட்டின் பாலை உபயோகிக்காமல் இருக்கலாம் அல்லது காய்ச்சி பயன்படுத்தலாம்.

பாதிக்கப்பட்ட மாட்டை மற்ற மாட்டிடம் இருந்து தனியாக வைத்து பராமரிக்க வேண்டும். இதன் மூலம் மற்ற மாடுகளுக்கு நோய் தொற்று பரவுவதை தடுக்க முடியும்.

Tags:    

Similar News