நிதி நிறுவன அதிபரை மிரட்டி பணம் பறித்த 5 நபர்கள் கைது ஒருவர் தலைமறைவு
பள்ளிபாளையம் அருகே நிதி நிறுவன அதிபரை மிரட்டி பணம் பறித்த 5 நபர்கள் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்;
பள்ளிபாளையம் அடுத்துள்ள டி.வி.எஸ் மேடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்த். திருச்செங்கோடு சாலையில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த தீபாவளி பண்டிகையின் போது தனது நிதி நிறுவனத்தில் பட்டாசு கடை அமைத்து விற்பனை செய்தார்
அப்பொழுது ஆவத்திப்பாளையம் பகுதியை சேர்ந்த பாம்பு என்கின்ற பகத்சிங் என்ற இளைஞர், முப்பதாயிரம் ரூபாய்க்கு பட்டாசுகளை வாங்கிக் கொண்டு பிறகு பணம் கொடுப்பதாக கூறி பட்டாசுகளை வாங்கி சென்றார். தீபாவளி பண்டிகை முடிந்து இரண்டு மாதங்கள், பாம்பு என்கின்ற பகத்சிங் பணம் கொடுக்காமல் கோவிந்தை ஏமாற்றி வந்ததுள்ளார்.
இந்நிலையில், தனது நிதி நிறுவனத்தில், பணியாற்றி வரும் ஊழியரான ராகுல் என்பவரிடம் பாம்பு என்கின்ற பகத்சிங் பணம் தருவதாக கூறி பட்டாசுகளை வாங்கி சென்றுவிட்டு தற்போது பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருவதால், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போவதாக ராகுல் வசம் கூறியுள்ளார்.
நிதி நிறுவனத்தில், வேலை செய்த ராகுல், நிதி நிறுவன பணத்தை கையாடல் செய்ததால் அவரையும் பணிக்கு வர வேண்டாம் என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராகுல், நிதி நிறுவன அதிபர் கோவிந்த் பகத்சிங் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உள்ள விவரத்தை பகத்சிங் வசம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ராகுல், பாம்பு என்கின்ற பகத்சிங், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மணி என்கின்ற மணிகண்டன், கருவாயன் என்கின்ற மணிகண்டன், குமரேசன், செந்தில்குமார், உள்ளிட்ட ஆறு பேர், டி.வி.எஸ் மேடு பகுதியில் உள்ள கோவிந்த் நிதி நிறுவனத்திற்கு சென்று , அவரை கத்தியை காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக ஓடப்பள்ளி கதவணை அருகே உள்ள முட்புதர் மறைவிற்கு கொண்டு சென்று அவரை அடித்து உதைத்து, நிதி நிறுவன அதிபர் கோவிந்த் சட்டைப் பையில் இருந்த 5000 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு, விஷயத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
உயிருக்கு பயந்து, இது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்த கோவிந்த், இது குறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மணி என்கின்ற மணிகண்டன் ,கருவாயன் என்கின்ற மணிகண்டன், குமரேசன், செந்தில்குமார், ராகுல் உள்ளிட்ட 5 நபர்களை கைது செய்தனர்
மேலும் தலைமறைவாக உள்ள பாம்பு என்கின்ற பகத்சிங்கை தேடி வருகின்றனர் . மேலும் குற்றவாளிகளிடமிருந்து இருசக்கர வாகனம் ஒன்று மற்றும் கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஐவரும் குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்பு திருச்செங்கோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.