வாரச்சந்தையில் தீ விபத்து- 2 டன் பிளாஸ்டிக் கருகியது

Update: 2021-03-07 04:30 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வாரச்சந்தையில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்ட அறையில் மர்ம நபர் தீ வைத்ததில் சுமார் இரண்டு டன் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் முழுவதும் தீயில் எரிந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளிலும் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள்,பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் வாரச்சந்தையில் உள்ள பழைய கால்நடை மருத்துவமனை கட்டிடத்தில் இருப்பு வைக்கப்பட்டு அவற்றை தனியார் ஆலைகளுக்கு நகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக குமாரபாளையத்தில் உள்ளூர் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து அந்த அறையினுள் வைக்கப்பட்டது.

இந்நிலையில் பண்டிகை காரணமாக வாரச்சந்தை வளாகம் திறக்கப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்ட அறையினுள் மர்ம நபர் ஒருவர் தீ வைத்து சென்றுள்ளார்.இதில் தீப்பற்றி மளமளவென பிளாஸ்டிக் பொருட்கள் எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கருப்பு புகை மண்டலமாக காட்சி அளிக்கத் தொடங்கியது. இது குறித்து நகராட்சி ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குமாரபாளையம் தீயணைப்பு துறையினர் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முற்றிலுமாக அணைத்தனர்.

இதில் தனியார் ஆலைகளுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் முற்றிலுமாக தீயில் எரிந்து கருகின. இந்த தீ விபத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் சுவாசக் கோளாறு பிரச்சனை ஏற்பட்டது. மேலும் இந்த தீ விபத்து சம்பவம் குறித்து நகராட்சி ஆணையாளர் கொடுத்த புகாரின் பேரில் குமாரபாளையம் போலீசார் தீ வைத்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தை வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News