சொட்டு நீர் பாசனம் அமைக்கும் திட்ட சலுகை: கொமதேக வலியுறுத்தல்

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்

Update: 2022-12-04 09:30 GMT

கொமதேக பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ(பைல் படம்)

விவசாயிகளுக்கு ஏழு வருடங்களுக்கு ஒரு முறை கொடுக்கும் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் திட்ட சலுகையை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வழங்க வேண்டுமென கொமதேக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்ட  அறிக்கை: 

சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து பாசன சாகுபடிப் பரப்பினை அதிகரிக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 2022-23 ஆம் ஆண்டில்இ இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில்இ 960 கோடி ரூபாய் ஒன்றிய மற்றும் மாநில நிதியில் சொட்டுநீர்ப்பாசன திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23-ல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் சிறு குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்திலும் மற்ற விவசாயிகள் 75 சதவீத மானியத்திலும் பயன் பெறுகின்றனர். இந்த திட்டத்தில் சிறு குறு விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்த பின்னர் மூன்று வருடங்களுக்கு பராமரிப்பு பணிகள் அந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனமே செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு பராமரிப்பு செய்யும் பொழுது பொருள்களுக்கு ஆகும் செலவு விவசாயியை சார்ந்தது. அதே சமயம் பராமரிப்பு செய்வதற்கு ஆள் கூலி அந்த நிறுவனமே இலவசமாக செய்து கொடுக்கிறது.

இந்த நிலையில் விவசாய நிலத்தில் இருக்கும் எலி போன்ற உயிரினங்கள் சொட்டு நீர் குழாய்களை கடித்து சேதப்படுத்தும் போது அதில் ஏற்படும் தண்ணீர் சேதம் மற்றும் குறிப்பிட்ட அழுத்தத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் உப்பு நீர் காரணமாக தண்ணீர் செல்லும் குழாய்கள் அடைப்பு ஏற்பட்டாலும் சரியாக தண்ணீர் பாய்ச்ச முடியாமலும் மீண்டும் அதை சரி செய்வதற்கும் ஆகும் பராமரிப்பு செலவும் விவசாயிகளுக்கு மிகபாரமாக அமைகிறது.

ஏழு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே விவசாயிகள் இந்த திட்டத்தை இலவசமாகவோ அல்லது கட்டணம் செலுத்தியோ விவசாயிகளின் தகுதிக்கு தகுந்தாற்போல பெற கூடிய தற்போதைய நிலையை விவசாயிகளுக்கு ஏற்படும் பராமரிப்பு செலவு மற்றும் சொட்டுநீர் பாசன குழாய்களின் ஆயுள் காலத்தையும் கருத்தில் கொண்டு ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொடுக்கும் இந்த சொட்டு நீர் பாசன திட்டத்தை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொடுத்து விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாகவும் விவசாயிகள் சார்பாகவும்  கேட்டுக்கொள்கிறேன்  என அதில் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News