அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த ஜனாதிபதி திரௌபதி முர்மு

அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று வழிபாடு செய்தார்.;

Update: 2024-05-01 11:36 GMT

அயோத்தி ராமர் கோவிலில் வழிபாடு செய்த ஜனாதிபதி திரௌபதி முர்மு.

அயோத்தி ராமர் கோவிலுக்கு இன்று சென்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்காமல் இருந்தது விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தான் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவில் திரெளபதி முர்முவை புறக்கணித்ததாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் சூழலில் தான் அவர் இன்று அங்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 3 அடுக்குகளுடன் இந்த கோவில் கட்டப்பட்டு வருகிறது.

முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி 22ம் தேதி கோவில் திறப்புக்கான பிரதிஷ்டை விழா நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கு சிறப்பு பூஜைகள் செய்து 5 வயது பால ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து தீபாரதனை காட்டி வழிப்பட்டார். அந்த விழாவில் முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர். அதன்பிறகு மறுநாளான ஜனவரி 23 முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு கோவில் திறக்கப்பட்டுள்ளது. கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் ராமர் கோவிலுக்கு இன்று முதல் முறையாக ஜனாதிபதி திரெளபதி முர்மு செல்கிறார். கோவில் திறந்து 4 மாதங்கள் கழித்து அவர் முதல் முறையாக இன்று கோவிலில் பாலராமர் சிலையை தரிசனம் செய்தார்.

டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அயோத்தி சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்முவை, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். அதன்பிறகு திரெளபதி முர்மு அயோத்தியில் சிறப்பு தரிசனம் மற்றும் ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்படி ஹனுமன் கர்கி கோவில் ராமர் கோவில் குபேர் தீலா உள்ளிட்ட கோவில்களில் திரெளபதி முர்மு தரிசனம் செய்தார்.அதன்பிறகு அவர் சராயு பூஜை மற்றும் ஆரத்தி நிகழ்வுகளில் பங்கேற்றார். ஜனாதிபதி திரெளபதி முர்மு வருகையையொட்டி அயோத்தி கோவில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜனவரி 22ம் தேதி நடந்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்கவில்லை. அவருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் பங்கேற்காத நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பழங்குடியினத்தவர் என்பதால் அவரை பிரதமர் மோடி புறக்கணித்ததாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும் தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் தலைவர்கள் மேடைக்கு மேடை கூறி வருகின்றனர். இந்த சர்ச்சைக்கு நடுவே தான் ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து இருப்பதால் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News