நாகை: கடல் அரிப்பு ஏற்பட்ட கிராமத்தில் ஓ.எஸ் .மணியன் ஆய்வு

நாகை அருகே நம்பியார் நகர் மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தை ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-09-19 08:15 GMT

நாகை மாவட்டம் நம்பியார் நகர்  மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ கிராமத்தில் 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. கடலை வளைத்து துறைமுகம் அமைக்கப்பட்டு வருவதால், அங்கு ஒரு புரத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நம்பியார்நகரர் மீனவ கிராமத்தில், கடற்கரை ஓரம் இருந்த வீடுகள் மின் கம்பங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வைக்கும் பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன.

இதையறிந்து  நம்பியார்நகர் மீனவ கிராமத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் எம்.எல்.ஏ. அங்கு கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது கூறிய மீனவர்கள், நாளுக்கு நாள் கடல் அரிப்பு அதிகரித்து வருவதால், தாங்கள் அச்சம் அடைந்திருப்பதாகவும், அங்குள்ள மற்ற குடியிருப்புகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவதை அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து கூறிய முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன், நம்பியார்நகர் மீனவகிராமம் கடலில் மூழ்கும் முன், கடற்கரையோரம் கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொண்டார். மேலும் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர தாம் முயற்சித்தும் அதனை பேரவைத் தலைவரும், மீன்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவரும் வாய்ப்பு அளிக்கவில்லை என குற்றம்சாட்டிய ஓ எஸ் மணியன், மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விரிவான கடிதம் வழங்க உள்ளதாகவும்  கூறினார்.

Tags:    

Similar News