நன்னீர் மீன், உவர்நீர் இறால் வளர்ப்பிற்கான காப்பீடுத் திட்டம் வெளியீடு...

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நன்னீர் மீன்வளர்ப்பு மற்றும் உவர்நீர் இறால் வளர்ப்பிற்கான காப்பீடு திட்டம் வெளியிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-11-21 16:40 GMT

காப்பீடு திட்டம் வெளியிடுதல் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.

நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழத்தில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த பல்கலைக்கழகத்துக்குள்பட்ட நாகப்பட்டினம், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி, பொன்னேரி மீன்வள பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகள் மற்றும் தொழில் நுட்ப படிப்புகளுக்கான வசதிகள் உள்ளன.

இதுதவிர, பல்வேறு சான்றிதழ் படிப்புகளும் மீன்வளப் பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மீன்வளர்ப்பில் புதிதாக பல்வேறு தொழில்முனைவோர்களை உருவாக்கும் வகையில் மாதம்தோறும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அலங்கார மீன் வளர்ப்பு, இறான் மீன் கொழுக்க வைத்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், உலக மீன்வள தினத்தை முன்னிட்டு நன்னீர் மீன்வளர்ப்பு மற்றும் உவர்நீர் இறால் வளர்ப்பிற்கான காப்பீடு திட்டம் வெளியிடுதல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு, மீன், இறால் வளர்ப்புக் காப்பீடு திட்டங்களை வெளியிட்டு பேசினார்.

தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழகத் தலைவரான கௌதமன், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் மணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஓரியன்ட்டல் காப்பீடு நிறுவனத்தின் தலைமை மேலாளர் சின்ஹா காப்பீடு திட்டத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்துடன் அலையன்ஸ் காப்பீடு நிறுவனம் புரிந்துணர்வு ஓப்பந்ததில் கையெழுத்திட்டது. நிகழ்ச்சியில், 132 இறால் மற்றும் மீன் பண்ணையாளர்களும் மற்றும் 30 மீன், இறால் வளர்ப்பை சேர்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளர் பெலிக்ஸ், ஆராய்ச்சி இயக்குநர் ஸ்டீபன் சம்பத்குமார், தலைஞாயிறு டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் பாலசுந்தரி மற்றும் மீன்வளத் துறை மண்டல இணை இயக்குநர், உதவி இயக்குனர், மீன், இறால் தீவன உற்பத்தி நிறுவனங்களின் அதிகாரிகள், பண்ணை இடு பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் முகவர்கள், மத்திய, மாநில அரசு நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News