நாகை அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்த 14 வயது சிறுவன் மீட்பு ; கோட்டாட்சியரிடம் ஒப்படைத்த சைல்டு லைன் அமைப்பினர்

நாகை அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்த 14 வயது சிறுவனை மீட்ட சைல்டு லைன் அமைப்பினர் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2021-06-11 16:23 GMT

நாகப்பட்டினம் அருகே சைல்டு லைன் அமைப்பினர் குழந்தை தொழிலாளரை மீட்டு கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள பாக்கம் கோட்டூர் கிராமத்தில் 14 வயது சிறுவன் கொத்தடிமையாக ஆடு மேய்ப்பதாக நாகை சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன், சைல்டு லைன் அமைப்பினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்பகுதியை சேர்ந்த மாதவன் என்பவரிடம் அந்த சிறுவன் கொத்தடிமையாக வேலை பார்த்தது தெரிய வந்தது. பின்னர் அந்த சிறுவனை மீட்ட சைல்டு லைன் அமைப்பினர்  நாகை கோட்டாட்சியர்  மணிவேலனிடம் ஒப்படைத்தனர்.

அப்போது அவர் நடத்திய விசாரணையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அம்மனூர் பெரியாச்சிகொல்லை பகுதியை சேர்ந்த தேவராஜன் - லட்சுமி தம்பதியினரின் 14 வயதான மகன் மணிமாறன் என்பது தெரிய வந்தது.

மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு தேவராஜன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் குடும்பம் வறுமையில் வாடியது. இந்நிலையில் மணிமாறனை காரைக்குடி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் ஆடு மேய்ப்பதற்கு கொத்தடிமையாக கடந்த 2016 ம் ஆண்டு லட்சுமி அனுப்பி வைத்தார். 

அங்கு ஆடுகளை மேய்த்து வந்த மணிமாறன் நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள பாக்கம் கோட்டூர் பகுதியை சேர்ந்த மாதவன் என்பவரிடம் வேலை பார்க்க அனுப்பி வைத்தது தெரிய வந்தது. இதன் பின்னர் ஆர்டிஓ சிறுவன் மணிமாறனை குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தார்.

Tags:    

Similar News