இறுதி சடங்கில் தீ விபத்து - வீடுகள் எரிந்து சேதம்

Update: 2021-04-10 05:15 GMT

நாகப்பட்டினத்தில் இறுதி சடங்கில் பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டு, 20க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமானது. இதில் இரண்டு மணி நேரம் போராடி தீயை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்.

நாகப்பட்டினம் பழைய புறவழிச்சாலை பகுதியில் காட்டு நாயக்கன் தெரு உள்ளது. இந்தப் பகுதியில் வசித்து வந்த தையல்நாயகி என்கிற மூதாட்டி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது அந்த பகுதியில் இருந்த இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்தனர். பட்டாசில் இருந்து ஏற்பட்ட தீப்பொறி அருகில் இருந்த குடிசை வீட்டில் விழுந்து தீ பற்றி எரியத் தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக அந்த தீ மளமளவென பரவி அருகில் இருந்த குடிசைகளுக்கும் பரவ தொடங்கியது. தீ விபத்து குறித்து அறிந்த நாகப்பட்டினம் தீயணைப்பு துறையினர் இரண்டு வாகனங்களில் வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

தீ கட்டுக்கடங்காமல் பரவ தொடங்கியதால் கீழ்வேளூர், திட்டச்சேரி, வேளாங்கண்ணி, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மேலும் அதிவிரைவு படை வீரர்கள் மற்றும் ஓஎன்ஜிசி, சி.பி.சிஎல் நிறுவனங்களுக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்களும் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குடிசை வீடுகளில் கேஸ் சிலிண்டர் இருந்ததால் தீயை அணைப்பதில் தீயணைப்பு துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது. சுமார் 2 மணிநேரம் பற்றி எரிந்த தீயில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள், நகைகள், பணம் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின.

சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, மாவட்ட எஸ்பி., ஓம்பிரகாஷ் மீனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களுக்கான உணவு மற்றும் தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் பாதிக்கப்பட்டவர்களிடம் தெரிவித்தார். தீ விபத்து குறித்து நாகப்பட்டினம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News