வாக்கு எண்ணும் மையத்தின் மேலே ட்ரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு

Update: 2021-04-20 11:30 GMT

நாகப்பட்டினத்தில் வாக்கு எண்ணும் மையத்தின் மேலே ட்ரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினத்தை அடுத்த தெத்தி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. மூன்றடுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை 20 நிமிடங்களுக்கும் மேலாக வாக்கு எண்ணும் மையத்திற்கு மேலே ட்ரோன் கேமரா பறந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த திமுக நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில் அங்கு குவிந்த கூட்டணி கட்சியினர் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட சென்னையை சேர்ந்த குமார், சுரேஷ்குமார், பாலாஜி ஆகிய 3 பேரை நாகூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும், அவர்களிடம் இருந்த ட்ரோன் கேமரா மற்றும் அதிலுள்ள காட்சிகளை பதிவு செய்த செல்போனை பதிவு செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே வாக்கு எண்ணும் மையத்தினுள் ட்ரோன் கேமராவை பறக்கவிட அனுமதி அளித்த அதிகாரிகளிடம் திமுகவினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி நாகை, திமுக மாவட்ட செயலாளர் கௌதமன், கீழ்வேளூர் சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி ஆகியோர் நாகப்பட்டினம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரவின் நாயரிடம் புகார் அளித்துள்ளனர். நாகையில் வாக்கு எண்ணும் மையத்தின் மேலே ட்ரோன் கேமரா பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News