கலெக்டர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் தஞ்சம்

Update: 2021-04-16 10:45 GMT

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு நரிக்குறவர்கள் சமூகத்தினர் தஞ்சம் அடைந்தனர்.

நாகப்பட்டினத்தை அடுத்துள்ள நாகூர் அமிர்தாநகர் சுனாமி குடியிருப்பில் 21 நரிக்குறவர்கள் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பாபு என்பவரின் வீட்டிற்கு மயிலாடுதுறையில் இருந்து அடிக்கடி வரும் உறவினர்கள் மது அருந்தியும், அக்கம் பக்கத்தினர் வீடுகளில் ரகளையில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் மோதலாக மாறவே நாகூர் போலீசார், அதே பகுதியை சேர்ந்த சந்திரன், ராமராஜ், ரவிக்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

இதனிடையே தாக்குதல் நடத்திய மயிலாடுதுறை கும்பல் மீது நடவடிக்கை எடுக்காத நாகூர் போலீசாரை கண்டித்தும், தங்கள் புகாரை போலீசார் உதாசீனபடுத்தியதாகவும் கூறி நரிக்குறவர்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மயிலாடுதுறையில் இருந்து தங்கள் பகுதிக்கு அடிக்கடி வந்து தாக்குதலில் ஈடுபடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள். பின்னர் சம்பவ இடத்திற்கு சமாதானம் செய்ய வந்த நாகூர் போலீசாரை அவர்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News