நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு சிபிசிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

சிபிசிஎல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றால் தங்களது போராட்டம் தொடரும் என எச்சரிக்கை.

Update: 2021-07-22 08:06 GMT

பணி இழப்புக்கு ஆளான தொழிலாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி சிபிசிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்.

நாகை அடுத்துள்ள பனங்குடி சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அங்கு பணியாற்றி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணி இழப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் பணி பாதிப்புக்கு ஆளான ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பேச்சுவார்த்தையின் படி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என சிபிசிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதற்கு சிபிசிஎல் நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பாதிக்கப்பட்ட சிபிசிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணி இழப்புக்கு ஆளான தொழிலாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக வந்தனர். பின்னர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென காத்திருப்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை சிபிசிஎல் நிர்வாகம் இழப்பீட்டு தொகை வழங்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள், பாதிக்கப்பட்ட சிபிசிஎல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றால் தங்களது போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News