அக்காவுடன் ஏற்பட்ட பிரச்சனையில் தங்கை வீட்டை அடமானம் வைத்த அதிமுக பிரமுகர்

அதிமுக பிரமுகர் உள்ளிட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீட்டின் உரிமையாளர் குழந்தைகளுடன் தர்ணா போராட்டம்.

Update: 2022-01-08 04:05 GMT

வீட்டின் முன் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நந்தினி.

நாகை ஆண்டோ சிட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தினி. இவரது கணவர் முருகன் புருணை நாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், நந்தினி மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கணவர் வெளிநாட்டில் இருப்பதால் மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு வாழ்ந்த நந்தினி சிரமம் கருதி தூத்துக்குடியில்  இருக்கும் தனது மாமியார் வீட்டிற்கு சென்று 6 மாதம் காலமாக அங்கு இருந்துள்ளார்.

வீட்டை பூட்டிவிட்டு நந்தினி சென்ற நிலையில், பால்பண்ணைச்சேரி பகுதியை சேர்ந்த பாலமுருகன், அதிமுக பிரமுகர் சிலம்பரசன் உள்ளிட்ட கும்பல் இரண்டு மாடி உள்ள வீட்டை அடமானத்திற்கு இரண்டு குடும்பத்தை தங்க வைத்துள்ளனர். சம்பத் என்பவரிடம் மூன்றரை லட்சம் பெற்றுக்கொண்டு கீழ் வீட்டிலும், ஐயப்பன் என்பவரிடம் மூன்றரை லட்சம் பெற்றுக் கொண்டு மேல் வீட்டையும் வீட்டின் உரிமையாளர் போல பத்திரம் தயார் செய்து அடமானத்திற்கு குடி வைத்துள்ளனர்.

தகவலறிந்த நந்தினி, தனது கணவர் பெயரில் உள்ள பட்டா, பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வந்து, தனது குழந்தைகளுடன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலிசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில், நந்தினி அங்கேயே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். விசாரணையில் நாகையை சேர்ந்த பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி சிறை சென்ற ராஜேஸ்வரியின் உடன் பிறந்த சகோதரி நந்தினி என்பதால், அவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் வீட்டை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே தனது அக்கா வாங்கிய கடனுக்கு என்னுடைய சொத்தை அபகரிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டுத்தர வேண்டும் என தர்ணா போராட்டத்தில் நந்தினி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News