தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பிரச்சார பேரணி

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து தஞ்சை ராஜராஜன் சிலை வரை பிரச்சார பேரணி.

Update: 2021-01-09 10:54 GMT

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாய் வழங்க வலியுறுத்தியும், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து தஞ்சை ராஜராஜன் சிலை வரை பிரச்சார பேரணி சென்றனர். இதற்காக தமிழக காவிரி விவசாயிகள் பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் வேதாரண்யத்தில் இருந்து துவங்கிய பேரணியானது இன்று நாகப்பட்டினம் அவுரித்திடலுக்கு வந்தடைந்தது. அப்போது விவசாயிகள் மத்தியில் பேசிய பிஆர் பாண்டியன், புதிய வேளாண் சட்டத்தை பாராளுமன்றத்தில் கூட்டி விவாதித்து ரத்து செய்ய தமிழக முதல்வர் பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்றும், வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவில்லை என்றால், தமிழக மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை புறக்கணிப்பார்கள் என்றார். மேலும் தமிழக அரசியலை நிர்ணயிக்கிற சக்தியாக விவசாயிகள் உள்ளனர். எனவே தமிழக விவசாயிகளை அழிக்கும் சட்டத்திற்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார். வரும் சட்டமன்ற தேர்தலில் விவசாயிகளின் குரல் ஓங்கி ஒழிக்கும் என்றும், அப்போது பாஜகவின் முகத்திரையை தோலுரித்து காட்டப்படும் என ஆவேசத்துடன் கூறிய பி.ஆர்.பாண்டியன். பாஜகவிற்கு துணை போகும் இயக்கங்களுக்கு எதிராக தேர்தலில் களம் இறங்குவோம் எனவும் சூளுரைத்தார்.

Tags:    

Similar News