14-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தமிழக அரசைக் கண்டித்து, மயிலாடுதுறை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் செயல்படும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை மண்டல அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில், 14-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேசாமல் இழுத்தடிப்பதாக தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்திட வலியுறுத்தியும் மயிலாடுதுறை போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சிஐடியு, ஐஎன்டியுசி, ஓய்வுபெற்ற ஊழியர் முன்னேற்ற நல சங்கம் மற்றும் அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.மேலும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 1.04.2003 க்குப் பிறகு பணியில் சேர்ந்த பணியாளர்களை ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும், நிலுவையில் உள்ள பஞ்சப்படியை வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 2015-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள பஞ்சப்படியை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.