மதுரை அருகே ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார்படுத்தும் பட்டதாரி இளைஞர்கள்

சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டி, கல்லாங்காடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார் படுத்துகின்றனர்;

Update: 2022-12-29 11:30 GMT

சோழவந்தான் அருகே, ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்தும் பட்டதாரி இளைஞர்கள்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டி, கல்லாங்காடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார் படுத்தும் பணிகளில் பட்டதாரி இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 15 ,16 ,17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்தும் பயிற்சி அளிக்கும் பணிகளில்  காளை உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .குறிப்பாக, படித்த பட்டதாரி இளைஞர்கள் பலர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளில் தங்கள் காளைகளும் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலுடன் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே அய்யப்பன்நாயக்கன்பட்டி, கல்லாங்காடு ஆகிய  கிராமங்களைச் சேர்ந்த பிரகாஷ், சூர்யா, மணி, திருவாசகம், பால்பாண்டி உள்ளிட்ட பட்டதாரி இளைஞர்கள் அனைவரும் அவரவர் தங்கள் ஜல்லிக்கட்டு காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக தயார் படுத்தி வருகின்றனர் .

இது குறித்து, ஜல்லிக்கட்டு காளையை தயார்படுத்தி வரும் பட்டதாரி இளைஞர் மணி கூறும் போது: தமிழகத்தின் பாரம்பரிய பெருமைக்காகவும் வீரத்தை தெளிவு படுத்துவதற்கும் மக்களின் பழைய கலாச்சாரம் காக்கப்படுவதற்காகவும் எங்கள் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறோம் குறிப்பாக கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக நாங்கள் அலங்காநல்லூர், பாலமேடு போன்ற ஊர்களுக்கு காளைகளை நடந்து கூட்டிச் சென்று வருவோம் ,

ஆனால், தற்போது அதற்காக சிறப்பு கவனம் எடுத்து வாகனங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து சென்று வருகிறோம் .மேலும், இந்த காளைகளுக்கு எங்கள் ஊரின் அருகில் உள்ள தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் பயிற்சி கொடுத்து வருகிறோம் .இதில், முக்கியமாக நடைப்பயிற்சி நீச்சல் பயிற்சி ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறோம் .

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உணவாக நாட்டு பருத்தி விதை, முதிர்ந்த தேங்காய் பருப்பு, வைக்கோல், நாட்டுக்கோழி முட்டை உள்ளிட்ட பல்வேறு சத்துள்ள தீவனத்தை வழங்கி வருகிறோம்.எங்கள் வீட்டு பெண்களும் இதற்காக தனிக் கவனம் செலுத்தி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தண்ணீர் வைப்பது அதற்கு நேரத்திற்கு உணவு அளிப்பது போன்ற பணிகளை செய்து வருகிறார்கள்.

எங்கள் ஊரில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று போட்டிகளில் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தங்கம், வெள்ளி காசுகள், அண்டா, சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசுகளை வென்று  வந்திருக்கிறது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

தமிழ்நாடு முழுவதும் 600 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில், தற்போது 100 இடங்களுக்கு கீழ்தான் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. எனவே பொது இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் அனுமதி தர வேண்டும்..அதே போன்று மதுரை மாவட்டம் சக்குடியில் சில ஆண்டுகளாக தடைப்பட்டிருக்கும் ஜல்லிக்கட்டை நடத்த அரசு மற்றும் மாவட்டம் நிர்வாகம் அனுமதிதர வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News