தந்தையை கொலை செய்ய முயன்ற மகன் உள்ளிட்ட மதுரை மாவட்ட கிரைம் செய்திகள்

தந்தையை கொலை செய்ய முயன்ற மகன் உள்ளிட்ட மதுரை மாவட்ட கிரைம் செய்திகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது.

Update: 2022-12-07 07:43 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி முதல் தெருவை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 40.) இவருடைய மகன் பூமிநாதன் (வயது25).மகாலட்சுமி நகர் நான்காவது தெருவில் குடியிருந்து வருகிறார். பூமிநாதனின் நடவடிக்கைகள் சரி இல்லாததால்  தந்தை ஆசைத்தம்பி கண்டித்துள்ளார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் தெற்குவெளி வீதியில் சென்று கொண்டிருந்த தந்தை ஆசைத்தம்பியை மகன் பூமிநாதனும், நேரு நகர் அதைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (25 ) என்பவரும் வழிமறித்து தாக்கி கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து தந்தை ஆசைத் தம்பி கொடுத்த புகாரில் பேரில் தெற்கு வாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து மகன் பூமிநாதன், நண்பர் கிருஷ்ணசாமி‌ இருவரையும் கைது செய்தனர்.

மதுரை  மேல அனுப்பானடி நத்தம் மெயின் ரோடு பகுதிகளில் கத்தி முனையில் செல்போன்கள் வழிப்பறி செய்த இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அய்யர் பங்களா நாகூர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஜெயகணேஷ் பாண்டி (வயது 19.). இவர் நத்தம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி செல்போனை பறித்தனர். இந்த சம்பவம் குறித்து ஜெயகணேஷ் பாண்டி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஒத்தக்கடை காந்தி நகர் மயானம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாத மூர்த்தி மகன் லிங்க பிரகாஷ் (22,)வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியைச் சேர்ந்த இரண்டு 17 வயது சிறுவர்கள் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

மதுரை மேல அனுப்பானடி உக்கிரபாண்டிதெருவை சேர்ந்தவர்  சிவ சண்முகநாதன்(வயது 47.) இவர்  இதேபகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை  மிரட்டி அவரிடமிருந்த செல்போனை  கத்திமுனையில் மிரட்டி மூன்றுபேர்  பறித்தனர். இந்த சம்பவம் குறித்து சிவசண்முகநாதன் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து தேடி வந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களும் அய்யர்பங்களா வழிப்பறியில் ஈடுபட்ட லிங்கபிரகாஷ் மற்றும் 17 வயது சிறுவர்கள் என்று தெரிய வந்தது. எனவே இந்த வழக்கு தொடர்பாகவும் அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை தத்தனேரி கீழவைத்தியநாதபுரம் நெப்போலியன் தெருவில் வேலுச்சாமி (வயது 60 )என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இங்கு இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்து வந்தார். இந்த தகவல் செல்லூர் போலீசாருக்கு தெரிய வந்தது .சப்.இன்ஸ்பெக்டர் அப்பாஸ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது .விற்பனை செய்தது போக மீதம் இருந்த 24 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரொக்க  பணம் ரூ. 7350ஐயும் பறிமுதல் செய்த போலீசார் முதியவர் வேலுச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News