மதுரை மாநகராட்சியில், குடியரசு நாள் விழா: தேசியக்கொடியேற்றிய மேயர்

2022 ஆம் ஆண்டு சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப்பரிசுகளையும் மேயர் வழங்கினார்;

Update: 2023-01-26 10:15 GMT

2022 ஆம் ஆண்டு சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப்பரிசுகளையும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில்  நடந்த குடியரசு தின விழாவில் மேயர் இந்திராணி பொன்வசந்த், தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், நடைபெற்ற குடியரசு தின விழாவில், மேயர் இந்திராணி பொன்வசந்த், (26.01.2023) தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன் ஆகியேரர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப்பரிசுகளையும், கலைநிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மேயர், ஆணையாளர் ஆகியோர் வழங்கினார்கள்.

விழாவில் மேயர் உரையாற்றியதாவது: இன்றைய தினம் வடக்கே இமயம் முதல் தெற்கே குமரி வரை இந்திய குடியரசு தினம் வெகுசிறப்பாக நம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற ஒற்றைக் கோட்பாட்டில் மதச்சரர்பற்ற ஜனநாயக மரபுகளைக் கட்டிக் காக்கும் ஓர் மாபெரும் மக்களாட்சி நடைபெறும் குடியரசு நாடாகும். இன்றைய தினம் நம் இந்திய தேசத்தில் விடுதலைக்காக தங்களின் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தியாகம் செய்த நம் முன்னேரர்களின் தியாகத்தை நினைவு கூறி அவர்களுக்கு நாம் பெரும் மரியாதை செய்திட வேண்டும்.

உதாரணத்திற்கு நான் எண்ணற்ற நிகழ்வுகளில் இரண்டை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். பஞ்சாப் மாநிலத்தில் ஜாலியன் வாலாபாக்கில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி ஆங்கில ராணுவ அதிகரரியான ரெஜினால்டு டையர் என்ற அதிகாரியின் தலைமையில் இந்திய சுதந்திரம் வேண்டி ஒன்று கூடி மக்களை நோக்கி துப்பாக்கி மூலம் சுடப்பட்டதால் அன்றைய அரசின் கணக்கின்படி 379 பேர் சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள் என கொல்லப்பட்டு சுமார் 2000 பேர் காயம்பட்டதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படுகொலை இந்திய நாட்டின் வடக்கே நடைபெற்றது. இதே போன்று இன்னொரு படுகொலை இந்திய திருநாட்டின் தெற்கே மதுரை மாவட்டத்தில் பெருங்காமல்லூர் கிராமத்தில் நடைபெற்றது.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தில் குற்ற பரம்பரை சட்டம் எனும் கொடுமையை எதிர்த்து கேள்வி கேட்ட மக்கள் குரல் வளையை நசுக்கும் விதமாக 1920 ஏப்ரல் 3ஆம் நாள் நள்ளிரவில் ஆங்கிலேய அதிகாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாயக்காள் என்ற பெண் உட்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது போன்று பல்வேறு இன்னல்களையும், கொடுமைகளையும் அனுபவித்து இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த நம் முன்னோர்களின் தியாகத்தை மதிக்கும் விதமாக நாம் நம் திருநாட்டைப் பாதுகாத்திட வேண்டும்.

ஜாதி, மதம், மொழி எனும் வேற்றுமை கடந்து உணர்வால் இந்தியராகவும் நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். மக்களை ஆள்பவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிரதம அவையில் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சாசன அமைப்பு எழுதப்பட்டு நாடாளுமன்றத்தில் 1950 ஜனவரி 24 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டு 2 தினங்கள் கழித்து ஜனவரி 26 ஆம் நாள் அந்த அரசியலமைப்பு சட்ட வடிவு நடைமுறைக்கு வந்தது. அன்றைய தினமே இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய இறையாண்மையை காக்கும் சகோரத்துவம் மிகுந்த தனித்தன்மை வாய்ந்த நிலப்பரப்பாக தமிழகம் திகழ்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி எனும் திராவிட மாடல் ஆட்சி தமிழக முதல்வர், தலைமையின் கீழ் அனைவரும் சமம் எனும் சகோரத் தத்துவத்துடன் தமிழகம் மிளிர்கிறது. இன்றைய தினம் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ள நம் ஆணையாளர் , துணை மேயர், மண்டலத் தலைவர்கள், குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் அனைவருக்கும்  வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இன்றைய தினம் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மற்றும் சிறந்த பணிக்கான பாரட்டுச்சான்றிதழ் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார் மேயர் இந்திராணி பொன்வசந்த்..

இந்நிகழ்வில், துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், மண்டலத் தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சர்மா, சுவிதா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், நகரப்பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி ஆணையாளர்கள் காளிமுத்தன், வரலெட்சுமி, மனோகரன், திருமலை, சையத் முஸ்தபா கமால், உதவி ஆணையாளர் (கணக்கு) விசாலாட்சி, கல்வி அலுவலர் நாகேந்திரன், உதவிப்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News