மதுரை அருகே உணவகங்களில் அரசு அதிகாரிகள் சோதனை
இந்திய உணவு பாதுகாப்பு தரங்கள் ஆணையம் மூலம் தமிழகத்துக்கு 2 நடமாடும் உணவு பரிசோதனை கூடங்கள் வழங்கப்பட்டன;
மதுரை அருகே திருமங்கலம் பகுதிகளில், உணவு தரக் கட்டுப்பாட்டு பரிசோதனை நடமாடும் ஆய்வகம் மூலம், உணவகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி பகுதியில், தமிழ்நாடு அரசின் உணவு தரக் கட்டுப்பாட்டு பரிசோதனை நடமாடும் ஆய்வகம்,அப்பகுதியில் உள்ள உணவகங்கள், சிறு கடைகள் உள்ளிட்டவற்றை அதிகாரியின் மூலம் ஆய்வு நடத்தி, சம்பவ இடத்திலேயே உணவுகளை பரிசோதனை செய்து, உணவு பொருளில் ஏதேனும் ரசாயன கலப்படங்கள் கலந்து இருக்கிறதா? எனவும் ,
உடல் நலத்தை பாதிக்கும் வகையில் வேறு பொருள்கள் கலக்கப்பட்டு இருக்கின்றன? என்பது குறித்த பரிசோதனை நடத்தப்பட்டு, உடனடியாக அதற்கான அபராத தொகையும் , உரிமம் இன்றி நடத்தப்பட்டு வரும் உணவகங்களுக்கு அதிரடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக உணவு தர கட்டுப்பாட்டு பரிசோதனை ஆய்வாளர் கோவிந்தன் தெரிவித்தார்.முன்னதாக அப் பகுதிகளில், பல உணவகங்களில் சோதனை நடைபெற்றது.
இந்திய உணவு பாதுகாப்பு தரங்கள் ஆணையம் மூலம் தமிழகத்துக்கு 2 நடமாடும் உணவு பரிசோதனை கூடங்கள் வழங்கப்பட்டன.இந்த வாகனம் மூலம் பொதுமக்கள், வணிகர்கள், மாணவ-மாணவிகளுக்கு உணவின் தரம், பாதுகாப்பு, காலாவதி தேதி போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் பால், நெய், எண்ணெய், தேயிலை, மிளகாய்த்தூள், பொரித்த கோழி இறைச்சி, பருப்பு வகைகள், மிளகு, குடிநீர், வெல்லம், குளிர்பானம் உள்ளிட்ட உணவு பொருட்கள் பரிசோதனை செய்து உடனுக்குடன் அறிக்கை வழங்கப்படும். எனவே பொதுமக்கள், வணிகர்கள் உணவு பொருட்களை பரிசோதனை செய்து கொள்ளலாம்.
உணவுப் பாதுகாப்பு துறையில் இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழகம் தோ்வு...
இதுகுறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:தமிழகத்துக்கு ஒரு மகிழ்ச்சியான, பெருமைப்படத்தக்க தருணம் ஏற்பட்டிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம், ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆகியவை சாா்பில் 2018 முதல் உலக உணவுப் பாதுகாப்பு தினம் (ஜூன் 7) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி, தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய அரசின் சுகாதாரத் துறைச் செயலா் ஆகியோா் தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகளைப் பாராட்டி சான்று அளித்துள்ளனா்.
அப்போது, உணவுப் பாதுகாப்பு துறையில் இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழகம் தோ்வு செய்யப்பட்டு அதற்கான பாராட்டுச் சான்று, மாநில உணவுப் பாதுகாப்புத் துறையின் அலுவலா் செந்தில்குமாரிடம் வழங்கப்பட்டது.
அதனுடன் உணவுத் தரம் நிறைந்த மாவட்டங்களும் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் 75 மாவட்டங்கள் அதில் இடம்பெற்றன. அதில், தமிழகத்தில் மட்டும் 11 மாவட்டங்களுக்கு அத்தகைய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி, திருவள்ளூா், காஞ்சிபுரம், சேலம், கோவை, சென்னை, ஈரோடு, திருநெல்வேலி, திருப்பூா், தூத்துக்குடி, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறைக்கு தர நிா்ணய பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன என்றார் அவர்.