தரமான பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்க முன்னாள் அமைச்சர் கோரிக்கை

கடந்த முறை போல் இல்லாமல், இந்தமுறை மக்கள் பயன்படுத்தும் வகையில், தரமான பொங்கல் தொகுப்பு அரசு வழங்க வேண்டும் என, சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கோரிக்கை விடுத்தார்.

Update: 2022-12-04 12:50 GMT

மதுரை எஸ்.எஸ்.காலனியில் அமைந்துள்ள, காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் கோவில், குருவார தின சிறப்பு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில், சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார்  பங்கேற்றார். 

மதுரை எஸ்.எஸ்.காலனியில் அமைந்துள்ள, காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் கோவில், குருவார தின சிறப்பு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தனது மகள் உட்பட 51 ஏழை எளிய மணமக்களுக்கான திருமண விழா அழைப்பிதழை வைத்து, சுவாமி தரிசனம் செய்து கோவில் நிர்வாகிகளுக்கு அழைப்பிதழை, சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் மற்றும் அவரது மகள் 'அம்மா சேரிடபுள் டிரஸ்ட்' செயலாளர் பிரியதர்ஷினி ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், 'பாரதி யுகேந்திரா' நிறுவனர் நெல்லை பாலு உடன் இருந்தார்.

அதன்பின், சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

பொங்கல் திருநாளில் முதல் முதலில், 100 ரூபாய் பொங்கல் பரிசை அன்றைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அவரைத் தொடர்ந்து, அவரது வழியில் தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கினார். கடந்த 2021ம் ஆண்டு அரிசி, சர்க்கரை, உலர் திராட்சை முந்திரி ஏலக்காய் ஒரு முழ நீளத்தில் கரும்பு இத்துடன், 2500 ரூபாய் பொங்கல் பரிசு தொகையை,  குடும்ப அட்டை வைத்திருக்கிற 2 கோடியே 8 லட்சம் குடும்பங்களுக்கும், எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

ஆனால், திமுக அரசு பொறுப்பேற்று இந்த 19 மாத காலத்தில், கடந்த பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு பொங்கல் பரிசு இல்லை. வேட்டி,சேலைகள் இலவசமாக கொடுக்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை. திமுக அரசு பொங்கல் பண்டிகைக்கு வழங்கிய தொகுப்பு பொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வது தொடர்பாக, கூட்டுறவுத் துறை ,வேளாண் துறை செயலாளர்கள் பதிலளிக்க, சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் 2017ம் ஆண்டு முதல், பொங்கல் பண்டிகையொட்டி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு, அதை ஒரு முழு வடிவத்தோடு மக்களிடத்தில் அதிமுக சேர்த்தது.

திமுக அரசு தரப்பில், குடும்ப அட்டைகளுக்கு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகளில் அரிசி, வெல்லம்,முந்திரி, ஏலக்காய், உலர் திராட்சை உள்ளிட்ட 20 வகையான பொருட்களை அண்டை மாநிலங்களில் இருந்து பெரும்பாலும் வாங்கப்பட்டது, இந்த பொருட்கள் பயன்படுத்தும் நிலையில்  இல்லை என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். அதன்பிறகு, பல மாவட்டங்களில் வழங்கப்பட்ட தொகுப்பு பொருட்கள்,  பயன்படுத்துவதற்கு தகுதி இல்லாத நிலையில் இருக்கிறது என்பதே வெட்ட வெளிச்சமானது.

பொங்கல் பரிசு தொகை என்பது வெறும் பரிசுத் தொகை மட்டும் அல்ல, அதில் அரசு மக்கள் மீது காட்டுகின்ற அக்கறையின் அடையாளம் உள்ளது.  ஆகவே, திமுக அரசு வருகிற பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில், தரமாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News