அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா: அமைச்சர் மூர்த்தி ஆய்வு
விழாவில் 75 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 180 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்படவுள்ளன;
மதுரையில் அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் விழா மைதானத்தை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி
மதுரை மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரையில் வருகின்ற 06.02.2023 -ல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, ஆய்வு மேற்கொண்டா.
பின்னர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல். மக்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியே எங்களின் செயல்பாட்டிற்கு ஊக்கமாக உள்ளது.10 ஆண்டில் செய்ய வேண்டிய சாதனைகளை ஒரே ஆண்டில் செய்துள்ளது
தி.மு.க. அரசு. 'மக்களை தேடி மருத்துவம்' என்ற சிறப்பு வாய்ந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். பெண் கல்விக்கு எதிரான அத்தனை தடைகளையும் தகர்த்தெறிவோம்.கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம். அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் அரசு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் வருகின்ற 06.02.2023-அன்று நடைபெறும் அரசு விழாவில் ,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்பங்கேற்று 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
குறிப்பாக 75 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 180 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்படவுள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இவ்விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்விழாவில், கலந்து கொள்ளும் பயனாளிகளை தேர்வு செய்து அவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களை அவரவர் ஊர்களுக்கு மீண்டும் பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதற்கும் தேவையான வாகன வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல்,காவல் துறையின் மூலம் விழா நடைபெறக்கூடிய இடத்தில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்விழாவை சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது , மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ,மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங்உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.