அலங்காநல்லூர் அருகே இறந்த ஐல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி
இந்த காளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சக்குடி உள்ளிட்ட ஜல்லிக்கட்டுகளில் வெற்றி பெற்றது;
மஞ்சமலை சுவாமி கோவில் காளை (பைல் படம்)
மதுரை அலங்காநல்லூர் அருகே வயது முதிர்வு காரணமாக இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டில் உள்ள விறுவிறுப்பின் காரணமாகவும் ஊடகங்கள் மற்றும் தமிழ் திரைப்படங்களின் மூலமும் உலக அளவில் பிரபலமாக உள்ளது. உலக பிரசித்திப் பெற்றதாக இந்தப் போட்டி திகழ்வதால் அதிகமானோர் கண்டுகளிக்கும் வகையில் இவ்வூரில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு மைதானத்தைத் தமிழக அரசு அமைக்கவுள்ளது
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே காந்தி கிராமம் மஞ்சமலை சுவாமி கோவில் காளை வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தது. இதனால் ,அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. இந்த காளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சக்குடி உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று யாரிடமும் பிடிபடாமல் சிறப்பாக விளையாடி தங்கம், வெள்ளி நாணயம், போன்ற பல்வேறு பரிசுகளும் பொருட்களும் பரிசாக வென்ற பெருமைக்குரியது இந்தக்காளை.
இந்த ஜல்லிக்கட்டு காளை ஊருக்குள் சுற்றும் போது செல்ல பிள்ளையாகவும், வாடிவாசலில் சீறிப்பாயும் காளையாகவும் மாறி ஊருக்கு பெருமை சேர்த்து வந்துள்ளது. இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக இந்த காளை திடீரென இறந்த தகவலறிந்து சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பலரும் வருகைதந்து காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும்,வெளியூர் பொதுமக்கள் பலரும் வருகைதந்து காளைக்கு மாலை, வேட்டி துண்டு அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பெண்கள் உட்பட ஒட்டு மொத்த கிராமமே ஒன்று திரண்டு கண்ணீர் மல்க காளையை ஊர்வலமாக எடுத்து சென்று கோவிலுக்கு அருகே நல்லடக்கம் செய்தனர். பல ஜல்லிக்கட்டுகளில் பரிசுகளை பெற்று தந்த காளை இறந்தது இந்த கிராமத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.