பழனி கும்பாபிஷேகத்துக்கு சிறப்பு ரயில்: மதுரைக் கோட்ட ரயில்வே அறிவிப்பு

பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 27 அன்று நடைபெற இருக்கிறது.

Update: 2023-01-25 16:15 GMT

பைல் படம்

பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 27 அன்று நடைபெற இருக்கிறது. மேலும், தைப்பூச விழா பிப்ரவரி 5 அன்று நடைபெற உள்ளது. இந்த விழாக்களை கருத்தில் கொண்டு பயணிகள் வசதிக்காக மதுரை - பழனி இடையே ஒரு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி , மதுரை - பழனி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06080) ஜனவரி 26, 27 மற்றும் பிப்ரவரி 3, 4, 5 ஆகிய நாட்களில் மதுரையிலிருந்து காலை 10.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பழனி சென்று சேரும்.மறு மார்க்கத்தில் இதே நாட்களில் பழனி - மதுரை முன்பதிவில்லா விரைவு ரயில் (06079) பழனியில் இருந்து மதியம் 02.30 மணிக்கு புறப்பட்டு மாலை 05.00 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.என, மதுரைக் கோட்டம் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில்,கும்பாபிஷேகம் நடைபெறுவதை ரொட்டி, யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது.பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க கூடுதல் ரயில்களும், அரசு சிறப்பு பேரூந்துகளும் இயக்கப்படவுள்ளன. கும்பாபிஷேகத்தன்று,திண்டுக்கல் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறங்காவலர் குழு அறிவித்துள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் கடவுள் முருகனின் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது பழனி முருகன் கோவில். போகர் சித்தர் உருவாக்கிய நவபாஷான மூலவர் சிலையான தண்டாயுதபாணியை வணங்கினால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாகவே லட்சக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து தண்டாயுதபாணியை வணங்கிச் செல்கின்றனர்.

பழனியில் போகர் சித்தர், புலிப்பாணி சித்தர் ஜீவசமாதிகளும் உள்ளதால் ஏராளமானோர் முருகனை வழிபட்டதோடு ஜீவ சமாதிகளையும் வழிபட்டு செல்கின்றனர். தைப்பூச திருவிழா, பங்குனி உத்திரம் என பிரசித்தி பெற்ற விழாக்கள் பழனியில் நடைபெறும்.

உலகப் புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் அடுத்த கும்பாபிஷேகம் 12 ஆண்டுகள் கழித்து அதாவது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பூஜை தொடங்கியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் கும்பாபிஷேக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கியது. அதன்படி சிதிலமடைந்த மண்டபங்கள், தூண்கள் சீரமைக்கப்பட்டன.

இதற்கிடையே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த ஜனவரி மாதம் பழனி முருகன் கோவிலில் ஆய்வு செய்தார். அப்போது விரைவில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனையடுத்து பழனியில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. அதன்படி ராஜகோபுரத்தில் வர்ணம் பூசும் பணி நிறைவுற்றது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்ககோபுரம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனி மலைக் கோவில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஜனவரி 26ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் எனவும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி முகூர்த்தக் கால் நடப்பட்டு ஜனவரி 18 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜை நடைபெறும் எனவும் அறங்காவலர் குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 18ஆம் தேதி காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது. 23ஆம்தேதி மாலையில் முதற்கால யாகம் தொடங்குகிறது. பின்னர் பழனி பாதவிநாயகர் கோவில் முதல் இரட்டை விநாயகர் கோவில் வரை உள்ள அனைத்து பரிவார சன்னதிகளிலும் 26ஆம்தேதி காலை 9.50 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி, ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணிக்குள் பழனி முருகன் கோவில் ராஜகோபுரம், தங்ககோபுரத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.


Tags:    

Similar News