பயன்படாத உலர் களங்கள், குளிர்பதன கிடங்குகள்: விவசாயிகள் வேதனை

முதல்வரால் திறந்து வைத்த குளிர்பதன கிடங்குகள், வேளாண் விரிவாக்க மையங்கள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் பராமரிப்பில்லாமல் இருப்பதுடன் மத்திய அரசின் பணமும் வீணாகி வருகிறது.

Update: 2021-12-02 07:30 GMT

பராமரிப்பில்லாமல் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வேளாண்மை வணிகத்துறை மூலம் கட்டப்பட்டுள்ள குளிர்பதன கிடங்குகள், வேளாண் விரிவாக்க மையங்கள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் பராமரிப்பில்லாமல் இருப்பதுடன் மத்திய அரசின் பணமும் வீணாகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசு உதவியுடன் நபார்டு வங்கிகள் இணைந்து, ஒன்றியம் தோறும், 2 கோடி ரூபாய் செலவில் குளிர்பதன கிடங்கு, வேளாண் விரிவாக்க மையம், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அமைத்துள்ளது.

இதில் நிலக்கடலை, வாழை, புளி, தக்காளி, நெல், தேங்காய் இவற்றை உலர வைப்பதற்கான உலர் களங்கள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் உள்ளிட்டவை உள்ளன. சமீபத்தில் போச்சம்பள்ளி, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் வேளாண் விரிவாக்க மைய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு பெய்த வடகிழக்குப் பருவமழையால் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளன. சுமார், 1,000 ஏக்கர் அளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இவற்றை உலர வைக்க இடம் இல்லாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் மத்திய அரசு நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள உலர் களங்கள் பராமரிக்கப்படாமல் உள்ளன.

கிருஷ்ணகிரி குளிர்பதன கிடங்கு மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள உலர் களங்களில் தண்ணீர் தேங்கியும், பாசி பிடித்தும், புற்கள் முளைத்தும், சேறும் சகதியுமாக துர்நாற்றத்துடன் காட்சியளிக்கிறது. கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் சுமார், 450 ஏக்கரில் விளைவித்து, நீரில் மூழ்கியுள்ள சுமார், 1,200 டன் நெல்லை விவசாயிகள் உலர வைக்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

வேளாண் வணிகத்துறை அதிகாரிகள், வேளாண் மையங்களை பராமரிப்பின்றி அலட்சியமாக போட்டு வைத்துள்ளனர். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க பல்வேறு அறிவுறுத்தல்கள் செய்யப்படும் எதையும் செய்யாமல் விட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும் நெற்கதிர்களை காய வைக்க இடமில்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, விவசாயிகள் இங்கெல்லாம் வருவதில்லை என அலட்சியமாக பதில் அளித்து வருகின்றனர். ஆனால் அரசால் உருவாக்கப்பட்ட திட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெரியாதது ஏன், மத்திய அரசு மானியத்துடன் வழங்கும் தார்ப்பாய் வழங்குவதும் இந்த துறை அதிகாரிகள் தான். அந்த தார்ப்பாய்களைப் போட்டு மூடி இருந்தால்கூட உலர்களங்கள் இவ்வளவு மோசமாக பாசி பிடிக்கும் அளவிற்கு சென்று இருக்காது.

மேலும் உலர் களங்கள் அவசியத்தை விவசாயிகளுக்கு எடுத்துச் செல்வதும் அதிகாரிகளின் கடமை, அதையும் அவர்கள் செய்யவில்லை. ஈரப்பதத்துடன் உள்ள நெற்கதிர்களை வைத்துக்கொண்டு விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறோம். உடனடியாக உலர்களங்களை புனரமைத்து சரி செய்தால் மீதம் உள்ள நெல் பயிர்களையாவது காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News