கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு இரண்டுசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-21 15:45 GMT

எரிந்து சேதமான கல்லூரி விரிவுரையாளரின் டூவீலர்.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வருபவர் மஞ்சரி. இவர் இன்று வழக்கம்போல் தனது டூவிலரில் கல்லூரிக்கு வந்தார். பின்னர் தனது டூவிலரை இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு கல்லூரிக்குள் சென்றுவிட்டார்.

இந்நிலையில் அவரது டூவிலர் தீப்பற்றி எரிவதை பார்த்த அங்கிருந்தவர்கள் இது குறித்து மஞ்சரிக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்ப்பதற்குள் அந்த டூவிலர் முழுவதும் எரிந்துள்ளது. உடனடியாக அவர் இது குறித்து கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீணைப்புத்துறையினர் அந்த டூவிலர் மீது தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர்.

இவரது டூவிலர் அருகில் கல்லூரியில் கட்டுமானப் பணிக்கு வந்திருந்த கட்டிட மேஸ்திரியான அருண் என்பவரின் டூவிலர் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த டூவிலரின் ஒரு பக்கம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீயையும் தீணைப்புத்துறையினர் அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கவுரவ விரிவுரையாளரின் டூவிலர் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது. கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த தீவிபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News