கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவின் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-05-08 04:15 GMT

கிருஷ்ணகிரி ஆவின் பால் நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களாக சீராக சம்பளம் வழங்குவதில்லை என்றும், ஆட்கள் பற்றாக்குறையால் பணிச் சுமை ஏற்பட்டுள்ளதைக் கண்டித்தும், அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உள்ளிருப்பு போராட்டத்திற்கு தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தின் போது, சீராக சம்பளம் வழங்க வேண்டும். ஆட்கள் பற்றாக்குறையைப் போக்க புதிய ஆட்களை உடனே நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அண்ணா தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் அருணாசலம் கூறியதாவது:

ஒவ்வொரு மாதமும் 30ம் தேதிகளில் ஆவின் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுவிடும். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக 10ந் தேதி ஆனாலும் சம்பளம் வழங்கப்படுவதில்லை. இதனால் கொரோனா காலத்திலும் சரியாக வேலைக்கு வந்து பணியாற்றி வரும் 180 பேர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஆவின் பொது மேலாளரிடம் கேட்டால், பணம் இல்லை என்று காரணம் கூறுகிறார். ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தியவர்களில் 30க்கும் மேற்பட்டவர்களை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டதால், ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் 8 மணி நேரம் செய்ய வேண்டிய வேலையை 12 மணி நேரம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் பணியாளர்கள் மட்டுமின்றி அலுவலர்களும் பணிச்சுமைக் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே ஆவின் நிர்வாகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு உடனே ஆட்களை நியமிக்க வேண்டும். சம்பளத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்க வேண்டும். இல்லையென்றால், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News