ஊருக்குள் வரும் யானைகளை தடுக்க நிரந்தர நடவடிக்கை - கே. பி. முனுசாமி

யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-10 14:45 GMT

யானை தாக்கி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற் தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை எம்எல்ஏ., கே.பி.முனுசாமி வழங்கினார்.

கர்நாடக வனப்பகுதியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக எப்ரி வழியாக தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானை சூளகிரி, வேப்பனஹள்ளி பகுதிகளில் சுற்றித் திரிந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகத்தின் பங்காருபேட் பகுதியில் இருவரை மிதித்து கொன்ற யானை, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நேரலகிரியைச் சேர்ந்த நாகராஜப்பா, சிகரமான பள்ளியைச் சேர்ந்த சந்திரசேகரன் ஆகிய இருவரை அடுத்தடுத்த நாட்களில் மிதித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்று வருகின்றனர். மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயணி யானை மிதித்து உயிரிழந்த இரு விவசாயிகளின் குடும்பத்திற்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினார்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு இன்று நேரில் வந்த வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி. முனுசாமி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகள் மலைப்பாங்கான பகுதிகள் நிறைந்துள்ளதால், யானைகள் ஊருக்குள் புகுவதும், விவசாய பயிர்களை நாசம் செய்வதும் உயிரிழப்புகளும் தொடர்வது வேதனை அளிக்கிறது.

யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க தமிழக அரசும், வனத்துறையினரும், எத்தனையோ நடவடிக்கை எடுத்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் வருடம் தோறும் நிகழ்ந்துவிடுகிறது. இதற்கு சுமார் 110 கிலோமீட்டர் நீளமுடைய கர்நாடக வனப்பகுதியை ஒட்டிய தமிழக எல்லையில் யானைகள் புகுவதை தடுக்க நிரந்தர தீர்வு எட்டப்படும் வகையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

மத்திய அரசு மற்றும் வனத்துறையினருடன் இணைந்து தமிழக அரசு இதற்கான திட்டங்களையும், நிதி ஆதாரங்களையும் திரட்டி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News