எருது விடும் விழாவுக்கு அனுமதி கோரி 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் எருது விடும் விழாவுக்கு அனுமதி கோரி 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-06 15:22 GMT

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனு அளிப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட தமிழர் பாரம்பரிய மஞ்சு விரட்டு நல சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்டவர்கள் மனு அளிக்க வந்தனர். கூட்டமாக வந்த அனைவரையும் தடுத்து நிறுத்திய போலீசார் 8 குழுவாக பிரித்து 20 நபர்களை மட்டும் மனு அளிக்க அனுமதித்தனர். பின்னர் 8 குழுக்கள் சார்பில் தனித்தனியாக மனு அளித்தனர்.

அந்த மனுவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் எருதுவிடும் விழா, மஞ்சு விரட்டு, தடுக்கு பண்டிகை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஜல்லிகட்டு சட்டம் இயற்றிய பிறகு பல்வேறு கிராமங்களை அரசிதழில் சேர்க்காமல் இந்த நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் அதிகம் கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாட்டு மாடு வளர்ப்பை ஊக்கபடுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டு மாட்டின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்படும். ஆகவே நாட்டு மாடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கவும், அனைத்து கிராமங்களிலும் தமிழர் பாரம்பரிய விளையாட்டை நடத்தவும் அரசிதழில் விடுபட்ட கிராமங்களை மீண்டும் சேர்த்து எருதுவிடும் விழா நடத்தவும், போட்டிக்கான நேரத்தை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நீட்டித்தும் அனுமதி அளிக்க வேண்டும் என குறுப்பிட்டு இருந்தனர்.

தேன்கனிக்கோட்டை, சூளகிரி, பாகலூர், கம்பம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஒரே மனுவுடன் வந்த 500 பேரையும் ஆட்சியர் அலுவலகம் உள்ளே அனுமதிக்க முடியாது என போலீசார் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News