கிருஷ்ணகிரி: அனைத்து ஊராட்சிகளிலும் வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்த கலெக்டர் உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளிலும் வீடுதோறும் காய்ச்சல், இருமல் சளி உள்ள நபர்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என்று, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-06-03 07:27 GMT

கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள நபர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்,  காணொலி வாயிலாக நடந்தது. கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூட்டத்திற்கு தலைமை வகித்தார். அவர் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று நடவடிக்கை போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கிராமபுறங்களில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளையும் தொடாந்து கண்காணிக்க வேண்டும்.

ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்கள், நோய்த்தொற்றின் ஆரம்ப அறிகுறியான காய்ச்சல், இருமல், இருக்கும்போதே உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாமல், நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு செல்வதால், ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே முன்கூட்டியே நோய் தொற்றினை கண்டறிந்து அவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்க  வேண்டும்.

கிராமபுறங்களில் நோய் தொற்று அறிகுறிகள் தொடர்பாக வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியினை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தெர்மல் ஸ்கேனர், ஆக்ஸிமீட்டர் போன்ற மருத்துவ உபகரணங்களை கொண்டும், கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், மூச்சுச்திணறல் உள்ளதா என கண்டறியப்பட வேண்டும்.

நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்களை பற்றிய விவரங்களை உடனடியாக மருத்துவ அலுவலரிடம் தெரிவித்து சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வட்டார மருத்துவ அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் நல அலுவலர், வட்டார இயக்க மேலாண்மை அலகு மேலாளர் ஆகியோர் கொண்ட குழுவினர், 50 முதல் 70 குடியிருப்புகளுக்கு ஒரு பொறுப்பு அலுவலரை நியமித்து இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

ஊராட்சி அளவில் சம்மந்தப்பட்ட ஊராட்சி செயலர்,  இப்பணிகளை ஒருங்கிணைக்கவும், ஊராட்சி ஒன்றிய அளவில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இப்பணிகளை ஒருங்கிணைக்கவும் அறிவுத்தப்படுகிறது. ஒரு சுற்று கணக்கெடுப்பு முடிவுற்ற பின்னர்,  தொடர்ந்து கணக்கெடுப்பை மேற்கொண்டு, இத்தொற்றினை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இக்கணக்கெடுக்கும் பணியினை ஒரு தீவிர இயக்கமாக விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, மகளிர் திட்ட இயக்குனர் ஈஸ்வரன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செந்தில் குமரார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News