கம்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற உயர் தொழில்நுட்பங்கள்

கம்பு சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்களை கடைபிடித்து அதிக மகசூல் பெறலாம் என கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கூறினார்

Update: 2021-04-24 08:15 GMT

கம்பு சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்களை கடைபிடித்து அதிக மகசூல் பெற வேண்டும் என கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடப்பு சித்திரை பட்டத்தில் கம்பு இறைவை சாகுபடி செய்யும் போது 90 முதல் 95 நாட்கள் வயது கொண்டு கோ&7 மற்றும் கோ&9 ரகங்களை தேர்வு செய்து, ஏக்கருக்கு 2 கிலோ விதையை 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியம் கொண்டு விதை நேர்த்தி செய்து, தண்ணீர் தேங்காது, அதே சமயம் நீர்வசதி உள்ள இடத்தை தேர்வு செய்து, நன்கு புழுதியாகும் வரை உழவு செய்திட வேண்டும்.

3 மீட்டர் நீளம், 1.5 மீட்டர் அகலம், 15 செமீ உயரம் உள்ள 6 மேட்டுப் பாத்திகளை தயார் செய்து விதைக்க வேண்டும். பயிர் செய்வதற்கு முன்பு நடவு செய்கின்ற வயலில் 5 மெட்ரிக் டன் தொழுஉரம், தழைச்சத்து 16 கிலோ, மணிச்சத்து 12 கிலோ, அசோஸ்பைரில்லம் 4 பாக்கெட் ஆகியவற்றை கலந்து இட வேண்டும்.

நாற்றங்காலில் 18 நாட்கள் வயதுடைய நாற்றுக்களை வரிசைக்கு வரிசை 45 செமீ இடைவெளியும், செடிக்கு செடி 15 செமீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். கம்பு பயிரில் குருத்து ஈ தென்பட்டால் 5 சத வேப்பங்கொட்டை சாறு அல்லது 1 சத நீமஸால் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.

அடிச்சாம்பல் நோய் காணப்பட்டால் ஏக்கருக்கு 200 கிராம் மெட்டாலாக்ஸின் அல்லது 400 கிராம் மேன்கோசெப் தெளிக்க வேண்டும். மேற்கண்ட தொழில் நுட்பங்களை விவசாயிகள் கடைபிடித்து அதிக மகசூல் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News