நிலக்கடலையில் அதிக மகசூல் பெற ஜிப்சம் இட வேண்டும்:வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

நிலக்கடலையில் அதிக மகசூல் பெற ஜிப்சம் இட வேண்டும் என கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-18 15:45 GMT

பைல் படம்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நிலக்கடலை பயிரின் ஒரு சிறப்பம்சம் என்னவெனில், வெளியில் பூ பூத்து மண்ணுக்குள் காய்க்கும் பயிர் ஆகும். நிலக்கடலையின் பூ கருவுற்ற பின்னர் அதன் ஊசியானது நிலத்தில் இறங்கி காயாக மாறும். இந்த சமயத்தில் ஜிப்சம் இடுவதால் மண்ணின் கடினத்தன்மை நீங்கி இலகு தன்மை அடைவதுடன், எளிதில் கருவுற்ற பூவின் ஊசி அரும்பு முனை உடையாமல் மண்ணுக்குள் இறங்கி அனைத்து பூக்களும் காய்களாக மாறி அதிக மகசூல் பெற வழி செய்கிறது. ஒற்றை காய்கள் இல்லாமல் இரு விதை காய்களாக உருவாகுவதற்கு ஜிப்சம் உறுதுணை செய்வதால் ஏக்கருக்கு அதிக மகசூல் பெற இயலும். ஜிப்சத்தில் உள்ள கால்சியம் சத்து நல்ல முதிர்ச்சியுடன் கூடிய காய்கள் உருவாகவும், பொட்டு திடமாக உருவாகவும் உதவுகின்றது.

சல்பர் சத்து அதிக எண்ணெய் சத்துடன் கூடிய நிலக்கடலை உருவாகவும் வழி செய்வதால், நல்ல தரமான மணிகள் உருவாவதுடன் பூச்சி நோயிலிருந்து பயிரைக் காப்பாற்றுகின்றது. ஜிப்சம், மண்ணை இலகுவாக்கி பொலபொலப்பு தன்மையுடன் வைத்து இருப்பதால் மழை நீரை சேமித்து வைக்கின்றது. மேலும் அறுவடை சமயத்தில் காய்கள் அறுபடாமல் முழுமையாக கிடைக்க வழி ஏற்படுகின்றது. எனவே விவசாயிகள் சிறப்பான மகசூல் பெற உதவி செய்கிறது. எனவே இந்த பருவத்தையும், ஈரப்பதத்தையும் உபயோகித்து தொழில் நுட்பங்களை தவறாது பயன்படுத்தி நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News