கிருஷ்ணகிரி அருகே 2 குட்டிகளுடன் சுற்றும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்

கிருஷ்ணகிரி அருகே 2 குட்டிகளுடன் சுற்றும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2021-09-21 09:45 GMT

கிருஷ்ணகிரி அருகே உள்ள பையனப்பள்ளி மற்றும் பெத்தாளப்பள்ளி ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் சிறுத்தை ஒன்று 2 குட்டிகளுடன் நடமாடுவதாகவும்,பையனப்பள்ளி கிராமத்தில் ஒரு ஆட்டையும், பாஞ்சாலியூரில் ஒரு ஆட்டையும், போலுப்பள்ளியில் 2 நாய்களை கடித்து கொன்றதாக கிராம மக்கள் வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்ததில் சிறுத்தையின் கால்தடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுத்தையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் அந்த பகுதி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் தாளப்பள்ளி, பையனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கும் வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

தற்போது சிறுத்தை கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள கூசுமலை பகுதிக்கு வந்து செல்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கேமரா டிராப் பொருத்தப்பட்டும், டிரோன் உதவியுடனும் வனச்சரக அலுவலர் தலைமையிலான வன பணியாளர்கள், கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் இரவு, பகலான தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

தர்மபுரி வன மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி மற்றும் ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி ஆகியோர் இன்று அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். குட்டிகளுடன் சுற்றும் அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதிக்கு விட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News