கிருஷ்ணகிரி: தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடைவிதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-01 10:30 GMT

ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று எண்ணிக்கை 800ரில் இருந்து தற்போது 10 என்கிற எண்ணிக்கைக்குள் உள்ளது. எனினும், உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா  தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 2,000 ஆகும்.  இவற்றில் 10 லட்சத்து 86 ஆயிரத்து 500 பேர்,  இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மீதமுள்ள நான்கு லட்சத்தி இருபதாயிரம் பேர்,  இதுவரையில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி எதுவும் செலுத்திக் கொள்ளவில்லை.  தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத நபர்கள்,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திரையரங்குகள்,  வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டு இடங்கள் என,  பொது இடங்களுக்கு செல்ல, இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.

தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் தங்களது கைபேசியில் உள்ள குறுஞ்செய்தி காண்பிக்க வேண்டும்,  செலுத்தி கொள்ளாதவர்கள்,  தடையை மீறி வந்தால் அபராதம் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். 

Tags:    

Similar News