குட்கா கடத்தல்: வாலிபர் குண்டாஸில் சிறையில் அடைப்பு

குட்கா பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2021-09-23 05:00 GMT

குண்டாஸில் கைது செய்யப்பட்ட அன்பு. 

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் சூதாட்டம், மணல் திருட்டு, கஞ்சா, கள்ளச்சாராயம் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்து 300 மதிப்பிலான 890 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை பெங்களூரில் இருந்து சேலத்திற்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து லாரியின் உரிமையாளரும், டிரைவருமான பர்கூர் அடுத்த கல்லாத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த அன்பு என்பவரை கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குட்கா மற்றும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரையை ஏற்று இன்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டார்.

இதையடுத்து அதற்கான உத்தரவினை ஏற்கனவே அன்பு சிறையில் உள்ள மத்திய சிறைசாலை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News