6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கூடுதலாக 2 சதவீதம் மின்னணு வாக்குப்பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கூடுதலாக 2 சதவீதம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

Update: 2021-03-24 13:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கூடுதலாக 2 சதவீதம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்குச்சாடிவகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டாவது கட்டமாக கணினி மூலம் சுழற்சி முறையில் பிரித்து வழங்கும் பணிகள் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்(மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்) ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இரண்டாம் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் கூறுகையில், மாவட்டத்தில் ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 தொகுதிகளில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்கனவே முதற்கட்டமாக சட்டப்பேரவை தொகுதி வாரியாக கணினி மூலம் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. 2298 வாக்குப்பதிவு மையங்களுக்கு 2715 பேலட் யூனிட், 2715 கண்ட்ரோல் யூனிட், 2944 விவி பேட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இரண்டாவது கட்டமாக சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வாக்குசாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகள் கணினி மூலம் சுழற்சி முறையில் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கு கூடுதலாக 2 சதவீதம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 5 தொகுதிகளுக்கு 400 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஓசூர் சட்டப்பேரவை தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கூடுதலாக 666 பேலட் யூனிட், 26 கண்டேரால் யூனிட், 26 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் பிஆர்ஓ ராம்குமார் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News