நாகர்கோவில் பாஜக நிர்வாகியை கொலை செய்ய முயன்ற வழக்கில் தீர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக நிர்வாகியை வெட்டி கொலை செய்ய முயற்சித்த வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை - நாகர்கோவில் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

Update: 2020-12-14 15:00 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளாடிச்சி விளை பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன். பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகியான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு காலையில் வீட்டில் இருந்து நாகர்கோவிலில் உள்ள தனது அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட இவர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்ற போது திடீரென ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் முத்துராமனை வழிமறித்ததோடு கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக கொலைவெறியில் தாக்கி விட்டு தப்பி ஓடினர் .

இதில் முத்துராமன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார், இச்சம்பவம் தொடர்பாக வழக்கில் மாஹீன், தாஹிர், அஷ்ரப் அலி, தர்வேஷ் மீரான், ஹக்கீம், தவ்பிக், நசீர் ஆகிய 7 பேர் மீது கோட்டார் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி ராமலிங்கம் கொலை முயற்சி வழக்கில் முக்கிய குற்றவாளியான மாஹீன் என்பவருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். ஏனைய ஆறு பிரதிகளும் இவ்வழக்கில் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லாததால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

Similar News