குமரி பகவதி அம்மன் கோவிலில் ரூ.20 கட்டாய வசூல்: பக்தர்கள் கண்டனம்

குமரி பகவதி அம்மன் கோவிலில் கோடி அர்ச்சனை பெயரில் 20 ரூபாய் கட்டாய வசூல் செய்வதற்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

Update: 2022-03-14 14:30 GMT

சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள குமரி பகவதி அம்மன் கோவில் உலக புகழ் பெற்ற ஆன்மீக ஸ்தலமாகவும், மாவட்டத்தில் அமைந்துள்ள சுமார் 3000 ஆண்டுகள் பழமையும் பாரம்பரியமும் கொண்ட கோவிலாக உள்ளது.

இந்தக் கோவிலின் பெயரைக்கொண்டே மாவட்டத்திற்கு கன்னியாகுமரி மாவட்டம் என பெயர் அமைந்தது, முக்கடல் சங்கமிக்கும் கடலில் புனித நீராடி இங்குள்ள பகவதி அம்மனை வழிபட்டால் பூர்வ ஜென்ம பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி நாடு முழுவதும் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவதோடு அங்கு அமைந்துள்ள கடலில் புனித நீராடு கன்னியாகுமரி பகவதி அம்மனையும் தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

அதிலும் தொடர் விடுமுறை, பள்ளி விடுமுறை நாட்கள் சபரிமலை சீசன் காலங்களில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல ஆயிர கணக்கில் இருக்கும். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் கோடி அர்ச்சனை என்ற பெயரில் கட்டாய பணம் வசூல் என்பது பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது. இதனிடையே கன்னியாகுமரியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலில் நடக்காத பூஜையான கோடி அர்ச்சனை என்ற பெயரில் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் 20 ரூபாய் கட்டாய வசூல் செய்யும் இந்து அறநிலையத்துறையின் நடவடிக்கைகளுக்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடக்காத பூஜைக்கு வருடக்கணக்கில் வசூலிக்கப்படும் இந்த பணம் எங்கே செல்கிறது என்றும், 20 ரூபாய் கொடுத்தால் நேரடி தரிசனம் இல்லை என்றால் பின் வழியாக சென்று தரிசனம் செய்ய வைத்து பக்தர்களின் மனதை புண்பட செய்து அடாவடித்தனம் காட்டும் கோவில் பணியாளர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் எந்தவிதமான வசூல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமலும் மீறியும் நடைபெறும் வசூல் வேட்டை யாரை பின்புலமாக வைத்து நடைபெறுகிறது என்ற கேள்வியையும் சமூக ஆர்வலர்கள் எழுப்பி உள்ளனர்.

Tags:    

Similar News