21 ஆண்டுகளுக்கு பின்னர் பொய்கை அணையில் இருந்து நீர் திறப்பு

குமரியில் கனமழையால், 21 ஆண்டுகளுக்கு பின்னர் பொய்கை அணை நிரம்பிய, அணையில் இருந்து விவசாயத்திற்காக நீர் திறக்கப்பட்டது.

Update: 2021-11-09 11:45 GMT

சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில்,  அணை நீரை திறந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரம் மற்றும்,  நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டார பகுதி விவசாயிகள் வசதிக்காக கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில், 2000ம் ஆண்டு, 45 அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணை கட்டப்பட்டது. அணை கட்டப்பட்ட நாள் முதல், முழுமையாக நிரம்பாமல் குறிப்பிட்ட 15 அடிக்கும் குறைவான அளவிலேயே தண்ணீர் இருந்து வந்தது. இதனால் விவசாயத்திற்கு அணை நீரை பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வந்தது.

தற்போது, கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், தாடகை மலையில் இருந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, 21 ஆண்டுகளுக்கு பின்னர் பொய்கை அணை, முதல்முறையாக தனது  முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனை தொடர்ந்து அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் உறுதித்தன்மையை உறுதி செய்தனர்.

இந்நிலையில்,  அணையில் இருந்து தோவாளை மற்றும் ராதாபுரம் வட்டார விவசாயிகள் வசதிக்காக,  இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில் விவசாயத்திற்காக அணை நீரை திறந்தனர். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News