குமரி அதிமுக பிரமுகர் மகன் கொலை வழக்கு: 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

குமரி அதிமுக பிரமுகரின் மகனை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Update: 2022-03-09 14:15 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன், அதிமுக பிரமுகரான இவர் குலசேகரம் அருகே உள்ள அயக்கோடு ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவரது மகன் லிபின் ராஜா ஆந்திராவில் உள்ள சட்ட கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே கடந்த 4-ஆம் தேதி மாலையில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்ற லிபின் ராஜா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இதனால் நீண்ட நேரம் தேடுத்தலுக்கு பின்னர் லிபின் ராஜா மாயமானது குறித்து அவரது பெற்றோர் நேசமணி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் லிபின் ராஜாவுக்கும் அந்த பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நெல்லை - குமரி மாவட்ட எல்லையான பழவூர் பகுதியில் லிபின் ராஜா கொலை செய்யப்பட்டு அவரது சடலம் சாலையோரமாக ஓடையில் புதைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடம் சென்ற போலீசார், நெல்லை மாவட்ட போலீசார் உதவியுடன் லிபின் ராஜா உடலை மீட்டெடுத்தனர்.

இந்நிலையில் லிபின் ராஜா கொலை சம்பவத்தில் தொடர்புடைய நாகர்கோயில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த எபின் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகிய இருவர் நாகர்கோவில் குற்றவியல் நடுவர் மன்றம் எண் இரண்டில் சரணடைந்தனர். இச்சம்பவம் தொடர்பான போலீசாரின் விசாரணையில், நண்பர்களான எபின் மற்றும் ஸ்டீபன்ராஜ்க்கும், லிபின் ராஜாவுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து கடந்த நான்காம் தேதி இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து லிபின் ராஜாவை அடித்து கொலை செய்து தங்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று சாலையோரம் புதைத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நீதிமன்றத்தில் சரணடைந்த இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News