குமரியில் 3 மடங்காக உயர்ந்த பூக்கள் விலை - வியாபாரிகள் மகிழ்ச்சி

சுப நிகழ்ச்சிகள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குமரியில் 3 மடங்காக உயர்ந்த பூக்களின் விலையால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-09-09 14:25 GMT

தோவாளை மலர் சந்தையில், பூக்களை வாங்கி செல்வதற்கு குவிந்த மக்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில், பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் பூக்களை வாங்கி செல்ல பொதுமக்கள் கூட்டம் அலை மோதும். அந்த வகையில் நாளை விநாயகர் சதுர்த்தி வீடுகளில் கொண்டாடப்படும் நிலையில், இன்று தோவாளை மலர் சந்தையில் பூக்களை வாங்கி செல்ல ஏராளமான பொது மக்கள் குவிந்ததால், மலர்ச்சந்தை களை கட்டியது.

பெங்களூர், ஓசூர், நிலக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் வந்திருந்த நிலையில்,  குமரி மாவட்டம் மற்றும் கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகை தந்து பூக்களை வாங்கி சென்றனர்.

தோவாளை மலர் சந்தையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை 400 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிப்பூ, இன்று 1500 ரூபாய்க்கும்;  300 ரூபாய்க்கு விற்பனையான பிச்சிப்பூ 1400 ரூபாய்க்கும், அதேபோல், ரோஜா 250 ரூபாய், அரளிப்பூ 350 ரூபாய், கிரேந்தி 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்திக்காக அருகம்புல் மற்றும் மல்லி பூக்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன, பூக்களின் விலை அதிகரித்துள்ளதோடு விற்பனையும் சுறுசுறுப்பாக உள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News