அடுத்தடுத்து 3 லாரிகள் 2 சொகுசு கார்கள் மோதி விபத்து - 5 பேர் படுகாயம்.

கன்னியாகுமரியில் அடுத்தடுத்து 3 லாரிகள் 2 சொகுசு கார்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-07-01 14:30 GMT

நாகர்கோயில் ஆரல்வாய் மொழியில் விபத்தில் சிக்கிய வாகனங்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து செங்கல் ஏற்றுவதற்காக ஆரல்வாய்மொழி நோக்கி சென்ற லாரி ஆரோக்கியநகர் அருகே வரும் போது எதிரில் நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் இருந்து கேரளாவுக்கு சிமெண்ட் லோடு கொண்டு சென்ற லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இரண்டு லாரிகளும் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அப்பகுதியில் வந்த மற்றொரு லாரியில் மோதியது, கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் சிக்கி கொண்ட சொகுசு காரும், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மற்றொரு சொகுசு காரும் நொறுங்கின. தொடர்ச்சியாக நடந்த விபத்தில் மூன்று லாரிகள் இரண்டு கார்கள் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் காரில் வந்த திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் ( 62 ) அவரது மனைவி ஜெஸ்டின்( 45 ) இவரது மகன் சுப்பையா சேம் உட்பட 5 பேர் படு காயம் அடைந்தனர்.

5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சாலையில் நொறுங்கி கிடந்ததால் அந்தச் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகன போக்குவரத்து தடைபட்டது. தகவல் அறிந்து வந்த ஆரல்வாய்மொழி போலீசார் வாகன இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சாலையில் நொறுங்கி கிடந்த வாகனங்களை அப்புறப்படுத்தி வாகன போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News