குமரியில் தொடர் கனமழையால் செங்கல் உற்பத்தி முடக்கம்: தொழிலாளர்கள் வேதனை

குமரியில் தொடர் கனமழையால் செங்கல் உற்பத்தி தொழில் முடங்கிய நிலையில் 5000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு.

Update: 2021-11-27 14:15 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக செங்கல் உற்பத்தி தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது.

தொழிற்சாலைகள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயமே முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. அதற்கு அடுத்த படியாக பிரதான தொழிலாக இருந்து வருவது செங்கல் உற்பத்தி தொழில்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் செங்கலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மதிப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக செங்கல் உற்பத்தி தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை அருமநல்லூர், தெள்ளாந்தி, ஆரல்வாய்மொழி, தோவாளை, சீதப்பால், கொட்டாரம் என மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செங்கல் உற்பத்தி செய்யும் சூளைகள் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த செங்கல் சூளைகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர். செங்கல் உற்பத்தி தொழில் முற்றிலுமாக முடங்கி உள்ளதால் இந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். தற்போது உற்பத்தி இல்லாததால் வருமானம் இல்லாத நிலையிலும் தொழிலாளர்களின் உணவு செலவு, மருத்துவச் செலவு உள்ளிட்டவற்றை தாங்களே செய்யும் நிலை இருப்பதாக செங்கல் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் அரசு உடனடி நடவடிக்கை எடுப்பதோடு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தொழிலாளர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் செங்கல் சூளை உற்பத்தியாளர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க அரசு முன்வர வேண்டுமென்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News